Thursday, 23 January 2014

நாட்டின் கடல் எல்லையை எப்படி கணக்கிடுகிறார்கள்?

மண்ணில் வேலி போடலாம், வானில் வேலி போடமுடியுமா என ராமகிருஷ்ணரை மேற்கோள் காட்டி பாரதியார் கேள்வி போடறார். இந்தக் கேள்வி ஐ.நா. சபைக்குக் கேட்டிருச்சோ என்னவோ, 1982-இல் ஒரு கூட்டம் போட்டாங்க. United Nations Convention on the Law of the Sea என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது..

கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.

கரையில் இருந்து ஆறு கடல் மைல். இதை நாட்டிகல் மைல் (‡Nautical mile)  என்றும் சொல்வார்கள். ஒரு நாட்டிகல் மைல் என்பது 1.85 கி.மீ.  தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’ அதாவது ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடல் பகுதி (territorial waters). இதில் அந்த நாட்டைச் சேர்ந்த கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்’ (contiguous) என்று அழைக்கப்படுகிறது. இதுவும் கரைக்கடல் மீது உரிமை உள்ள நாட்டின் ஆளுகைக்குட்பட்டதுதான். அந்த நாடு அண்மைக் கடற்பரப்பில் செல்லும் படகுகள்,  சிறுகப்பல்களிடமிருந்து சுங்க வரி, வேறு பல கட்டணங்களை வசூலிக்கவும், குடியமர்தல், சுகாதாரம் தொடர்பான சட்டங்கள் இவை தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் சட்ட, விதிமுறை மீறல்களைத் தடுக்கவும் அதிகாரம் பெற்றது. இதில் அந்த நாட்டின்  விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன்பின் 200 கடல் மைல் தொலைவிற்கு உள்ளது தனிப் பொருளாதாரக் கடல் பகுதி (Exclusive Economic ). இந்தப் பகுதியில் இதன் தரைப்பரப்பில் உள்ள கனிமங்கள், பெட்ரோலிய வளம் ஆகியவை அதற்கு அண்மையில் கரையைக் கொண்டுள்ள நாட்டிற்கு உரியது. இதற்கு அப்பால் உள்ளது உலகினர் அனைவருக்கும் உரிமை உள்ள ஆழி.

சுருக்கமாகச்  சொன்னால் ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து  12 கடல் மைல் (சுமார் 22.2 கி.மீ.) தொலைவிற்குள் உள்ள கடல் பகுதியில்    பயணிகள் கப்பல் போகலாம். ஆனால், மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள்  செல்வதற்கு, அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மீன்பிடிப் படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் பறக்க வேண்டும். இவையெல்லாம் ஐ.நா. அமைப்பு வகுத்தளித்திருக்கும் சட்டங்கள். இதனை ஏற்று இந்த ஒப்பந்தத்தில் இதுவரையிலும் இந்தியா, இலங்கை உட்பட 158 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.

18-ஆம் நூற்றாண்டில் இருந்து 20-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஒரு நாட்டின் கடல் எல்லை, ஆறு கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்தது.  ஏனெனில், அப்போது இருந்த பீரங்கிகள் வீசுகின்ற குண்டுகள், ஆறு கிலோ மீட்டருக்கு மேல் பாயாது.

இப்போது கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்து விட்டன. என்றாலும், சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகள், தங்களுடைய கடல் எல்லையை, 6 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொண்டு உள்ளன.

சரி, இரு நாடுகளுக்கு இடையே உள்ள கடலின் அளவு 12+12 கடல் மைலுக்கும் (அதாவது 44 கி.மீ.க்கும். குறைவாக இருந்தால் என்ன செய்வது?

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பரப்பின் அகலம் 25 கிலோ மீட்டர்கள்தாம். இத்தகைய சூழலில், இரண்டு நாடுகளும் பேசி, கடல் எல்லையைச் சரிபாதியாக வகுத்து, ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தியா, இலங்கையிடையே அத்தகைய ஒப்பந்தங்களும் உள்ளன.

ஆனாலும் பிரச்சினையும்  இருந்து வருகிறது. உண்மையில் பிரச்சினை எல்லை இல்லை. மீன்கள்தான். இப்போது கரை ஓரங்களில் மீன் வளம் குறைந்து விட்டது. எனவேதான், மீனவர்கள், அண்மைக் கடலையும் தாண்டிச் செல்லுகிறார்கள் எனச்  சொல்லப்படுகிறது.

அரசியல்வாதிகள் தீர்க்க முடியாத பிரச்சினையை அறிவியல் தீர்த்துவிடும். அட, என் காலரை ஏன் பார்க்கறீங்க. நான் அதைத் தூக்கிவிட்டுக்கிட்டு அலையறேனா என்ன?

சின்னப் பிள்ளைங்க இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சிருக்காங்க. அறிவியலின் துணையோடுதான். மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தகவல் தொடர்பியல் மாணவிகள் அஸ்வினி, தீபீகா, திவ்ய தேவி, மணிமொழி, அமுதா ஆகிய  மாணவிகள் ஒரு கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டினால் அந்தக் கருவி எச்சரிக்கை செய்வதோடு, படகின் என்ஜினையும் ஆஃப் செதுவிடும். படகு மேலே நகரமுடியாமல் நின்று விடும்.

இந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது?   செயற்கைக்கோளின் உதவியோடு, கணினி மூலம் பூமியில் ஒருவரின் நடமாட்டங்களை வழி நடத்த முடியும். இதற்கு குளோபல் பொசிஷனிங்  சிஸ்டம் (GPS) என்று பெயர். இந்த GPS கருவியோடு,  சர்வதேசக் கடல் எல்லைகள் பற்றிய கம்ப்யூட்டர் சிப் ஆகியவை கொண்டது மாணவிகளின் கருவி. கடலில் எல்லையை நெருங்குவதற்கு 10 மீட்டர் இருக்கும்போது முன் பதிவு செய்யப்பட்ட குரல் ஒன்று படகில் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யும். அதையும் தாண்டிப் போவார்களானால், சென்சர் மூலம் என்ஜினை நிறுத்திவிடும் (காண்க: ‘புதிய தலைமுறை கல்வி’ 12 ஆகஸ்ட் 2013 இதழ்).


கடலுக்குப் போகிறவர்கள் கவர்மெண்ட்டை நம்புவதற்குப் பதில் இந்தக் கருவியை நம்பலாம்.

1 comment: