Wednesday, 12 February 2014

பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


எந்த ஒரு கபட விஷயமும் தமிழனுக்கு உதிக்காது. அதற்கென்றே புகழ் பெற்ற சில வெளி மாநிலக் கூட்டம் இருக்கிறது. எந்த சந்தில் புகுந்தால் குறுகிய காலத்தில் இலாபம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இதை உறுதிப் படுத்த மகா நதி படத்தில் வரும் 'தனுஷ்' கேரக்டரைச் சொல்லலாம்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மணப்புரம் அடகு வியாபாரக் கடையை தொடங்கியது திருச்சூரைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் மகன் நந்த குமாரும்.

திருச்சூர் நகரை சுற்றி மட்டுமே செய்த நகை அடகு வியாபாரம் மெல்ல கேரளா முழுவதும் வியாபித்தது. 1992 இல் முதன் முதல் பங்கு சந்தையில் பதிவு செய்த அடகு கடை எனும் முத்திரையோடு தங்களின் வணிகத்தைப் பெருக்கினார்கள். இன்றைய தேதியில் 26 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து சுமார் 3000 கிளைகளைக் கொண்டு பரப்பி, சுமார் ரூ 11600 கோடி அளவு சொத்துக்கள் உள்ள நிறுவனம் என்றும், 22000 ஊழியர்களையும் 16 இலட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்ட நிறுவனம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

அதே போல மற்றொரு நிறுவனம் முத்தூட் நிறுவனம். 25000 ஊழியர்களையும், 22 மாநிலங்களில் மற்றும் 4 யூனியன் பிரதேச பகுதிகளில் மொத்தம் 4000 அலுவலகங்கள் இந்தியா முழுவதும் இல்லாது என்று மார் தட்டிக் கொள்கிறார்கள். நிகர சொத்து மதிப்பு ரூ 23372 கோடிஎன்று சொல்கிறார்கள். அதே நேரம் அவர்களது திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிக் கடன் சொத்து மதிப்பை விட அதிகம். அதை விட மற்றொரு முக்கிய விஷயம், இந்த நிறுவனத்தின் முழு பங்குகளும் அவர்களது குடும்பத்திற்கு உள்ளேயே இருக்கிறது.

சரி எதற்கு இந்த விளக்கமெல்லாம்?

இவர்களின் வியாபார தந்திரத்தையும், அதை பயன் படுத்திய புத்திசாலித்தனமும், இன்றைக்கு ரிசர்வ் வங்கியின் சட்டத்தால் பாதிக்கப் பட்டதும் மற்றும் அடகு வைத்துள்ள மக்களின் நிலை என்ன ஆகும் என்று தெளிவிக்கத்தான் இந்தப் பதிவு.

இந்த நிறுவனங்கள் கண்டெடுத்த முதல் வளமான வாடிக்கையாளர் உள்ள மாநிலம் தமிழ் நாடு. சட்டென்று தேவைப் படும் பணம் உடனடியாக கிடைக்கும் இடம் ஒரே இடம் நம் லாலா சேட்டுக் கடைதான். சேட்டு ஒரு எல்லைக்கு மேல் கொடுக்க மாட்டார் என்பதால் உடனே செல்வது வங்கிகளுக்குத்தான்.

இதிலும் இரண்டு விதமான வங்கிகள். ஒன்று தேசியமயமாக்கப் பட்ட வங்கி மற்றது நிதி அல்லது சிட் பண்டு அல்லது கூட்டுறவு வங்கி.

பின்னவைகளில் வாடிக்கையாளருக்கு ஓரளவு அனுசரணை உண்டு, ஆனால் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் இந்த மாதிரி வாடிக்கையாளர்களை படுத்திய பாடு இருக்கிறதே? அப்பப்பா? விரட்டு வார்கள், நாளைக்கு வரச் சொல்வார்கள், குறைத்து மதிப்பீடு செய்வார்கள், கடன் கொடுக்கும் தொகையில் ஒரு பகுதியை டெபாசிட் செய்யச் சொல்வார்கள். டோக்கன் கொடுத்து விட்டு நாள் பூராவும் இழுத்தடிப்பார்கள். காரணம் இவர்களது வட்டி விகிதம் தனியார் வங்கிகளை விட சற்றே குறைவு.

மனம் நொந்த மக்கள், வேறு வழியில்லாமல் தனியார் வங்கிகளை நாடத் தொடங்கியபோதுதான், இது போல மலையாளிக் கம்பெனிகளுக்கு இதில் உள்ள குள்ள நரித்தனமான மிகப் பெரிய வர்த்தகம் புலனாகியது .

சிறிய அளவில் இது போல நிதி நிறுவனம் தொடங்க முதல் பெரியதாகத் தேவை இல்லை. அனால் அபரிமிதமான வளர்ச்சி வேண்டும் என்று எண்ணும் பண முதலைகள் இல்லையா? அதற்க்கான குறுக்கு வழிகளை ஆராய்ந்தார்கள். அவர்களுக்கு கிடைத்தது ஒரு மிகப் பெரிய கொழு கொம்பு.

மக்களிடம் இருந்து நகைகளை அடமானம் வாங்கி அதே நகையை மறு அடமானம் வைப்பது எனும் மாபெரும் சட்டத்தின் ஓட்டையை உபயோகித்தார்கள். இந்த ஓட்டையை வேண்டுமென்றே உண்டாக்கினார்களா இல்லை இந்த ஓட்டையினால் பலன் பெரும் அரசியல் வாதிகள் தெரிந்த்தேதான் இவ்வாறு சட்ட விதிகளை உண்டாக்கினார்களா எனத் தெரியவில்லை.

அதாவது இந்த இரண்டு நிதி நிறுவனங்களும், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளுடன் புரிந்துணர்வு இட்டுக் கொண்டு, மக்களிடம் பெற்ற நகைகளை இங்கே வந்து அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்வார்கள்.

சரி, இதில் என்ன தவறு? வர்த்தகம் சரியாகத்தானே நடக்கிறது? இதில் என்ன விதி முறை மீறல் இருக்கிறது என்று கேட்பவர்களே.....

இதை நீங்கள் லென்ஸ் கொண்டு பார்க்க வேண்டும். தேசிய வங்கிகள் நகை அடமானத்திற்குக் கொடுக்கும் வட்டி விகிதம் சுமார் 12%. அவர்களது நிர்ணயம், நகைகளின் மொத்த மதிப்பில் இருந்து 60 முதல் 70 சதம் வரையே கொடுக்கும். இதற்கு மேல் கடன் வேண்டும் என்றால் நீங்கள் அதிக நகைகளை கொடுக்க வேண்டி வரும்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு உடனடி தேவை ரூ 50000 என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் உள்ள நகையின் மதிப்பு ரூ 60000 மட்டுமே. தேசிய வங்கிகள் உங்களுக்குக் கொடுக்கப் போகும் கடன் ரூ 36000 முதல் ரூ 40000 மட்டுமே (அதாவது நகை மதிப்பில் 60% முதல் 70% வரை). ரூ 50000 தேவைப் படும் இடத்தில் வெறும் ரூ 40000 மட்டுமே கிடைக்கையில் மீதம் தேவைப்படும் தொகைக்கு என்ன செய்வீர்கள்?

இங்கேதான் வருகிறார்கள் நமது ஹீரோக்கள் முத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனங்கள். உங்களை அன்போடு வரவேற்பார்கள். உங்களுக்குத் தேவையான பணம் ரூ 50000 ஐயும் கொடுப்பார்கள். ஆனால் வட்டி 36% மட்டுமே. அதுவும் நீங்கள் கடனின் அசலைத் திரும்பச் செலுத்தப் போகும் கால அளவை அனுசரித்து. மூன்று மாதம் மட்டுமே தவணை. மீறினால், அதாவது நீங்கள் கட்டத் தவறினால், உங்கள் நகை நீங்கள் அறியாமலேயே விற்கப்படும்.
அதற்கான சட்ட விதிகளை மதிப்பதாக நீங்கள் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள், கடன் வாங்கும்போது.

ஆனால் இவர்கள் வைக்கும் உங்களுடைய நகைக்கு 8% மட்டுமே கார்ப்பொரேட் வட்டி. ஆனால் இவர்கள் உங்களுக்கு உங்கள் நகையை வைத்தே பெற்ற பணம் கொண்டு உங்களுக்கே கடனுக்குக் கொடுக்கும் வட்டி விகிதம் 36%

யார் இவர்களுக்கு உதவுகிறார்கள்? ஏன் இந்த 26% பண இலாபத்தை அனுமதிக்க வேண்டும்? யார் இதன் பின் புலத்தில்? விடை தெரியாத கேள்விகள்.

இந்த வேலையை ஏன் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் செய்து பயனை நாட்டுக்குத் தரவில்லை? எதற்காக தனியார் கொள்ளை இலாபம் சம்பாதிக்க உடன் பட வேண்டும்? ஒரு ஏழை மாணவனுக்கு கல்வித் தொகை கடன் தர இவர்கள் மனப்பூர்வமாக முயன்றதுண்டா? ஒரு குறு தொழில் முனைவோருக்குத் தந்ததுண்டா இச்சலுகை?

சரி, போகட்டும்...... என்ன ஆகும் இப்போது?

உங்களின் நகையின் மதிப்பீடு சரிதானா? அது எந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டாவது எடை போடப்பட்டு விலை நிர்ணயிக்கப் பட்டு உள்ளதா?

இல்லை....

காரணம், நீங்கள் வாங்கிய அந்த பழைய நகை ஒரு சவரனுக்கு ரூ 400 கொடுத்துள்ளீர்கள். அதை அடகு வைக்கும் போதுதான் உங்களுக்குத தெரிகிறது அதன் மதிப்பு ஒரு கிராமுக்கு ரூ 1800 என்று. நீங்கள் வியந்து போய் 'சரி சரி' என்கிறீர்கள் உடனடியாக. காரணம் உங்களின் கடன் அவஸ்தை மற்றும் நிதி பற்றாக்குறை. உங்களுக்கோ மன நிறைவு. நீங்கள் வாங்கியதைக் கால் அதிக மதிப்பை உங்கள் நகை பெறுகிறது. ஆனால் நீங்கள் சோதிக்க மறந்தது, உங்கள் நகை மதிப்பீடு சந்தை மதிப்பீட்டிற்கு ஒப்பாகிறதா என்று!

ஆனால் உங்களின் தங்க மதிப்பு உண்மையில் ஒரு கிராமுக்கு ரூ 2400 என இந்த நிறுவனங்கள் ஏற்கனவே தேசிய வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. அப்போ, மிச்சம் உள்ள உங்களின் தங்க மதிப்பு ரூ 600 எங்கே போயிற்று? இதற்கும் சேர்த்தே இ ந் நிருவனங்கள் பணம் பெற்று அதை சுழற்சியில் இட்டு பணததை இரெட்டிப்பாக்குகிறார்கள்.

என்னிடம் பதில் இல்லாத கேள்விகள் பலதும் உள்ளன..... அவை ஒவ்வொன்றாக....

1. எந்த ஒரு நகையும் அடகில் இருந்து குறிப்பிட்டக் காலக் கெடுவிற்குள் திரும்ப மீட்கப் பட இயலாவிட்டால், நிறுவனங்கள் அந்த நகைகளை ஏலம் போடுவதாக தினசரி பத்திரிக்கைகளில் அறிவிக்க வேண்டும். அது மாதிரி விளம்பரங்களை இதுவரை இந்த இரு நிறுவனங்கள் தினசரி பத்திரிக்கைகளில் கொடுத்துப் பார்த்ததாய் நினைவில்லை? உங்களுக்கு?

2. தேசிய வங்கிகள் தங்களின் வரை முறைக்குள் கடன் கொடுக்க முடியாமல் போய், பிற தனியார் நிறுவனங்கள் இலாபம் அனுபவிப்பதை ஏன் ரிசர்வ வங்கிக்குச் சொல்லவில்லை?

3. கொள்ளை என்று தெரிந்தும் எப்படி தேசிய வங்கிகள் தனியார் அடகு நிறுவனங்களின் விதிகளை மதித்து அவர்களுக்கு மொத்தக் கடன் (bulk loan) கொடுத்தார்கள்? ஏன் தங்கள் வங்கிகளுக்கு விதி முறைகளைத் தளர்த்தக் கோரவில்லை?

4. அரசாங்க வங்கிகளாக இருந்தும் இது போல மிகப் பெரிய வர்த்தக பரிமாற்றங்களை (ரூ. 70000 கோடி அளவில் உள்ள வர்த்தகம்) ஏன் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்?

5. தேசிய வங்கிகள், இத்தனை பெரிய சந்தையை ஏன் பயன்படுத்திக்கொள்ளாமல் தனியாருக்கு வசதிகள் செய்து கொடுத்ததின் பின் புலத்தில் உள்ள பயனாளிகள் யார் யார்?
இது போல பல கேள்விகளுக்கு விடை இல்லை.
சரி..... இது வரை உள்ள சரித்திரங்கள் போகட்டும்.....எதனால் இந்த கட்டுரை எழுந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா?

உண்மை 1: சில நல்ல உள்ளங்கள் மத்திய ரிசர்வ் வங்கிக்கு, இந்த தனியார் துறைகளின் தில்லு முல்லுக்களை வெளிப்படையாகத் தெரிவித்ததின் மூலம், ரிசர்வ் வங்கி தன பிடிகளை இறுக்கி, இந்தத் தனியார் நிறுவனங்களுக்குக் கிடுக்கிப் பிடி போட்டது. அதாவது இந்த தனியார் நிறுவனங்கள் தங்க மதிப்பீட்டில் அறுவது சதவீதத்திற்கு மேல் கடன் கொடுக்கக் கூடாது.

மற்றும், கடன் தொகைக்கு 13% மேல் வட்டி விதிக்கக் கூடாது என்றும் தன் விதி முறையைத் திருத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் தன் பிடியை இறுக்கியது.

வியர்த்துப் போன இந்நிறுவனங்கள் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து, சந்தையிலிருந்து வெளியேற முடியாமலும், வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டிக்குக் கொடுத்து இரத்தத்தை உறிஞ்ச முடியாமலும் கிடந்து தவிக்கின்றன.

அதன் காரணமாக தங்களின் பெயர் பிரபலத்தை உபயோகித்து பயணச்சீட்டு விற்பனை, ரியல் எஸ்டேட் என்று தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த முற்பட்டு விட்டன. ஆனால் இவையெல்லாம் யானை வாய்க்கு சோளப்பொறி போல. இவர்களால் பழைய ஜமீன்தார் போல வாழ முடியவில்லை என்பதே உண்மை.

இவர்களின் நிஜமான வருமானம் ஏழைகள் வயிற்றில் அடித்துப் பிழைக்கும் கந்து வட்டி மூலம் தான்.

உண்மை 2. அடகு வைத்தவர்கள் மீட்க முடியாமல் பெரும்பாலும் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள். இதனால் இந்நிருவனங்களுக்குக் கிடைக்கும் இலாபம் 30% மூன்றே மாதத்தில் (எவ்வாறு என்று பின்னால் விளக்கி இருக்கிறேன்)

உண்மை 3. இந்த முதலாளிகள் தங்களின் வளமான வாழ்க்கையை எப்படி செலவிடுகிறார்கள் என்றால், தினம் ஒரு நடிகை, நாளும் ஒரு கூத்து என்று வாழ்கிறார்கள், ஏழைகளின் பணம் கொண்டு. உதாரணம், முத்தூட் நிறுவனத்தின் மகன் ஜேக்கப் கோட்டயம் வரும் வழியில் கொல்லப் பட்ட போது அவருடன் காரில் சல்லாபத்தில் இருந்தது ஒரு 'பாவ'மான 'ஜெயம்கொண்ட' நடிகை.

உண்மை 4. மூவாயிரம் நாலாயிரம் கிளைகள் எவ்வாறு தோன்றுகின்றன? இதற்கு எந்த சிரமமும் இல்லை. நல்ல வர்த்தகத் தெருவில் ஒரு அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நல்ல வாடகையும் கொடுக்கிறார்கள். (எவன் அப்பன் வீட்டுக் காசு?) உடனே அவர்கள் கணக்கில் ஒரு அலுவலகம் கூடுகிறது. அங்கு உள்ள மக்களின் நகைகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? செக்யூரிட்டி போட்டிருக்கிறார்களா என யார் கவலைப் படுகிறார்கள்? இது போலத் தொழிலை எந்தக் கிராமத்திலும் தொடங்கலாமே! யாருக்குத்தான் பண நெருக்கடி இல்லை?

உண்மை 5. இத்தனை நகைகள் வைத்துள்ள இடத்திற்கு எந்த விதமான பாது காப்பும் இல்லை என்பதுதான் உண்மை. சமீபத்திய உதாரணம் கோயம்பேட்டில் நடந்த கொள்ளை. முத்தூட் கம்பெனியின் மேலாளர் செந்தில் குமார் என்பவர் ஒரு நாடகம் நடத்தி சுமார் 60 இலட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகை கொள்ளை போனதாக அறிவித்தார். அதற்குச் சாட்சியாக தன கைகளையே கீறிக் கொண்டு ஆட்டோக் கொள்ளையர்கள் தன்னைக் குத்திவிட்டு சென்று விட்டார்கள் என்று நாடகம் நடத்தினார். ஆனால் போலிசார் ஒரே நாளில் ஆட்களைப் பிடித்து நகைகளை கைப் பற்றி விட்டனர். இது எதைக் காட்டுகிறது? ரூ 60 இலட்சம் நகைகள் (யாருடையதோ) அனாமத்தாகக் கையாள்கிறார்கள் என்று தெரிகிறதல்லவா?

உண்மை 6: வங்கிகளில் உள்ள வசதி போல வாடிக்கையாளர்களின் நகைகளை வைக்க, பாதுகாப்புப் பெட்டகமோ இல்லை காமிரா கண்காணிப்போ இந்த நிறுவனங்களிடன் இல்லை. ஆகவே வைக்கப்படும் நகைகளுக்கான உத்திரவாதமும் இல்லை.

உண்மை 7: வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளுக்கு தேசிய வங்கிகளிடம் இருந்து இவர்கள் பெரும் கடனுக்கான வட்டி 8%, இவர்கள் பதிலுக்கு வாடிக்கையாளர்களிடம் வாங்கும் சராசரி வட்டி 20-24%. நடுவே உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். தேசிய வங்கியைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இலாபம், ஒற்றைக் கை மாறலில். இது தான் இதன் இரகசியம். ஏன் இவர்களை சட்ட விதி முறைக்குள் கொண்டு வரவில்லை?

உண்மை 8: இந்நிறுவனங்கள் இத்தனை நாள், இத்தகைய இலாபத்தில், வர்த்தகம் செய்ய யார் யாரெல்லாம் உதவினார்கள் என்று அரசாங்கம் சிபிஐ மூலம் விசாரணை செய்ய வேண்டும். அதிக வட்டி ஈட்டும் தொழிலாகிய இதை, கந்து வட்டி, மீட்டர் வட்டி எக்ஸ்பிரஸ் வட்டி ஆகிய சட்ட விரோத வர்த்தகங்களின் அடிப்படையில் இந்த நிறுவனங்களை தணிக்கை செய்து இது வரை ஈட்டிய பணத்தை அரசாங்கம் தன கஜானாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மை 9: தற்காலம் 'அடகு வைத்த நகையை மறு அடகு வைக்க' என்று சில நிறுவனங்கள் நல்ல வேடம் போட்டு, இந்த முத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனங்கள் நக்கித் தின்றதில் மிச்சம் உள்ள எச்சிலைத் தின்ன 'மாதா ஃ பைனான்ஸ்' மற்றும் சில குள்ள நரிகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. இவர்கள் வேலை என்னவென்றால், மூழ்கிக் கிடக்கும் உங்கள் நகையை மீட்டு, அதற்கு மேல் கொஞ்சம் மிச்சம் சொச்சம் போட்டு உங்கள் கையில் கொடுத்து விட்டு உங்கள் நகைகளை லவுண்டிக் கொள்வார்கள்.

உண்மை 10: வழக்கம் போல நகைக் கடை கொள்ளைக் காரர்கள் தங்கள் பங்கிற்கு, மக்களை சுரண்டும் இன்னொரு பணி. கூலி சேதாரம் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அது புதிய நகை செய்யும்போது. ஆனால் உங்கள் பழைய நகையை விற்க வேண்டும் என்று முயற்சித்தால், இவர்கள் அதை வாங்க மறுப்பார்கள். விற்று புதிய நகை மட்டுமே வாங்கினால் மட்டுமே பழைய நகைகளை மாற்றிக் கொள்கிறோம் என்பார்கள். நகை விற்றால் ரொக்கம் கிடையாது. காரணம். இந்தக் குள்ள நரிகளுக்கு தங்கள் இடத்திலேயே இரெட்டை இலாபம் தரும் வியாபாரத்தை வாடிக்கையாளர்கள் பழைய நகை எனும் பெயரில் கொண்டு தருகிறார்கள்.

எப்படி என்று பார்க்கலாம்.......

இங்கே நகை வியாபாரிகள் போடும் நாடகம் இது. தங்கத்தை விலைக்கு வாங்கி, பணம் தரமுடியாது, அதற்கு பதிலாக புதிய நகை வாங்குங்கள் என்று பண்ட மாற்று செய்யும்போது, பழைய நகையின் எடையில் 10% முதல் 25% வரை குறைப்பார்கள், காரணம் அதில் உள்ள கல், மற்றும் அழுக்கு என்று நோபல் பரிசு பெரும் ரேஞ்சுக்கு அளந்து விடுவார்கள். பின்னர் நகையின் மதிப்பீட்டை மாற்று குறைவு என்று 22 கேரட் தங்க நகை காலப் போக்கில் இருபது கேரட் ஆகி விட்டது என்று விஞ்ஞானம் ஒப்புக் கொள்ளாத ஒரு கெமிஸ்ட்ரி விதியைச் சொல்வார்கள். அப்படி சொல்லி ஒரு 10% கழித்தபின்னர் பழைய நகைக்கு அவர்கள் இடும் மொத்த விலை அன்றைய தங்கத்தின் விலையில் இருந்து சுமார் 30% வரை குறைப்பார்கள். இந்த பழைய நகையைக் கொடுத்து புதியது வாங்கும்போது, செய்கூலி, சேதாரம், 22 காரெட் தங்கம் விலை, விற்பனை வரி என்று பலதும் இட்டு, உங்களை அதிகப் படியாக 20% வரை செலவு செய்ய வைத்து விடுவார்கள். உதாரணமாக கிராம் ஒன்று இன்றைய தினம் தங்கத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் என்றால் உங்கள் பழைய நகை ரூ 1400 ஒரு கிராமிற்கும், புதிய நகை ரூ 2400க்கும் வர்த்தகம் நடக்கும். அதாவது 40% இலாபம். இதன் பெயர் பகல் கொள்ளை. இதைத் தடுக்க, எந்த சட்ட விதியும் இல்லை.

உண்மை 11; இந்த நேரத்தில் தான் முத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடிக்கிறது. 20% வட்டிக்குக் கொடுத்த பணம் மூன்று மாதத்திற்குள் வரவில்லை என்றால் நகையை அவர்கள் விற்றுக் கொள்ளலாம் என்று நீங்கள் எழுதிக் கொடுத்த ஷரத்தை உபயோகிப்பார்கள். ஏற்கனவே உங்கள் நகை மதிப்பீடு 20% குறைவாகவே இட்டிருப்பார்கள், ப்ளஸ் உங்களுக்குக் கொடுத்த கடன் அதிலிருந்து 90% என்று வைத்துக் கொண்டாலும், உங்கள் நகையின் சந்தை மதிப்பில் 30% இழக்கிறீர்கள். நகை வியாபாரி உங்களிடம் வாங்க நினைப்பதும் இதே விலை, முத்தூட், மணப்புரம் நிறுவனங்களில் அடகில் கிடக்கும் நகைகளுக்கும் இதே மதிப்பு, கூடுதலாக வட்டி கட்ட வேண்டிய தொகையும் சேர்த்தால், பழைய நகையின் அடிமாட்டு விலையை விட வாடிக்கையாளர்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டி வரும். எனவே இந்தக் கட்டத்தில் வட்டிப் பணம் கட்டாமலும், நகைகளை மீட்காமலும் நிதி நிறுவங்களிடம் போனால் போகட்டும் என்று விட்டு விடுகிறார்கள். நஷ்டம் மக்களுக்கு. மூன்று மாதத்தில் 30% இலாபம் இந்நிறுவனங்களுக்கு.,

ஆக என்ன செய்ய வேண்டும் மக்கள்?

1. தயவு செய்து நகைக் கடன்களுக்கு தேசிய வங்கிகளையே நாடுங்கள். நீங்கள் வட்டித் தொகை இரண்டு வருடங்கள் வரை கட்டவில்லை என்றாலும் இந்த வங்கிகள் பொறுத்துக் கொள்வார்கள்

2. உங்கள் பாரம்பரிய நகைகளை இந்த நிறுவனங்களிடம் அடகு வைக்காதீர்கள். உங்களின் மதிப்பு மிகும் நகைகளை இழக்க நேரிடும். மதிப்பு மிகும் நகை என்பவை, காணும்போது பழைய நினைவுகளுக்குக் கொண்டு செல்லும் அம்மாவின் தாலி, சங்கிலி, பாட்டியின் பாம்படம், அக்காவின் கை வளையல். பாரம்பரிய பழையக் கால நகைகள் முதலியவை.

3. தனியார் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பு பெட்டகங்கள் வைத்திருக்கிறார்களா என ஆராயுங்கள்.

4. அவ்வப்போது ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிடும் விவரங்களைப் படியுங்கள்.
விவரம் இல்லாத ஜனங்கள் விவரங்களைத் தெரிந்து கொண்டு இந்த மாதிரி நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும். அல்லாது ஊசி இடம் கொடுப்பதாலேயே நூல் நுழைந்தது எனும் பழம் சொல்லை, மிகவும் வருத்தத்துடன் இந்த விஷயத்திலும் பொருத்திக் கொள்ள வேண்டி வேண்டும்.

Monday, 10 February 2014

தமிழக அரசியல் உருவான வரலாறு


னிதனின் ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஒரு அரசியல் சார்பு இருப்பதை யாரும் மறுப்பதற்க்கில்லை. டார்வினின் கோட்பாடுகளின்படி  மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து இந்த அறிவார்ந்த நிலைக்கு வருவதற்குள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறான் என்பது வரலாற்றுச் சான்று.  மனிதனின் இந்த வளர்ச்சிக்கு சமூகம்,  பண்பாடு, கலாச்சாரம், அரசியல், போர்முறை, பொருளாதாரம், சித்தாந்தம் என ஒவ்வொன்றும் அரும் பங்களித்திருத்திருக்கின்றன.
நாடோடிகளாகத் திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்து ஆற்றங்கரையில் வாழத்தொடங்கிய காலம் என்பது மனித வளர்ச்சிப் பாதையின் முதல்படி எனலாம். இனக்குழுக்களாக வாழத்தொடங்கிய மனிதன்  அனுபவம் வாய்ந்த குழுத் தலைவனின் நெறிப்படி வாழத்தொடங்கினான்.  பண்பார்ந்த ஒரு இனக்குழுத் தலைவனின் அடுத்த வளர்ச்சிப் படிநிலைதான் அரசன் எனும் தலைவன் ஆட்சிமுறை உருவாகியது.
சங்க காலத்தில் மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தமிழகம் பொற்கால ஆட்சியைக் கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகிறார்கள். காரணம் அவர்களுடைய சிறப்பான ஆட்சிமுறை. அதன்பிறகு பிற்கால சோழர்கள் ஆட்சிதான் தமிழகத்தில் ஒரு நிலைத்த ஆட்சியை ஏற்படுத்தியது.    இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம், மக்கள் நலனை முன்படுத்திய அரசாட்சி முறை.
aarsil
இந்தியாவின் பல நிகழ்வுகளுக்கு தமிழர்களின் நாகரீகம் தான்   முன்னோடி.  அதில் நாம் பெருமையடைவதில் தவறேதுமில்லை. ராஜராஜசோழன் காலத்தில்தான் குடவோலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது மக்கள் தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை அவர்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் இன்றைய ஜனநாயக தேர்தல் முறைக்கு முன்னோடி. இப்படியாக, அரசியலில் மட்டுமின்றி, இன்றைய நாகரீகத்தின் எல்லா துறைகளிலும் தமிழகத்தின் முதல் பதிவு இருக்கும்.
தவிர்க்கமுடியாத காரணியாக நம் வாழ்வோடு ஒன்றியிருக்கும் நம் தமிழக அரசியல் உருவான சூழலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.   ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அரசியல் சக்திகள் மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றன. தலைவர்களுடைய பேச்சாற்றல், அவர்களுடைய செயல்பாடுகள் என மக்கள் நம்பிக்கைக்கு காரணமான ஏதோ ஒன்று அவர்களை ஈர்த்திருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு, மொழிப் பிரச்சனை, இனப்பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால், மக்கள்  ஆளும் கட்சிகளை புரட்டிப்போட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் பதிந்திருக்கிறது. சமூக மாற்றத்தை மையப்படுத்தி உருவாகிய பல இயக்கங்களும் நம் வரலாற்றில் உண்டு. சில கட்சிகள் வந்த வேகத்தியே மறைந்த  நிகழ்வுகளும்  நம் அரசியல் வரலாற்றில் உண்டு. ராஜாஜி தொடங்கிய சுதந்திரா காங்கிரஸ், ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கட்சி, ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி, எஸ்.டி.சோமசுந்தரத்தின் நமது கழகம், நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டவர்கள் துவக்கிய மக்கள் தி.மு.க. போன்ற  எண்ணற்ற கட்சிகள் தமிழகத்தில் மிக எதிர்பார்ப்போடு துவக்கப்பட்டு பின்னர் காணாமல் போய்விட்டன.
periyar
மக்கள் மனநிலையை புரிந்து கொண்ட பல  இயக்கங்கள், அரசியல் கட்சிகளாக அவதாரமெடுத்து சாதனை படைத்திருப்பதும்  நம் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் தமிழக அரசியல் உருவான வரலாற்றை அலசும் கட்டுரையாக இந்த தொடர் கட்டுரையை உருவாக்க முற்பட்டுள்ளோம்.
mar (1-15) 2012 - 2.pmd
மன்னராட்சி காலத்திற்குப் பிறகு ஆங்கிலேயரின் கட்டுகுள் வந்தது, இந்திய அரசியல். அதை மீட்டெடுக்கும் பொருட்டு விடுதலை போராட்ட உணர்வோடு தொடங்கப்பட்ட இயக்கமே காங்கிரஸ் பேரியக்கமாகும். இந்திய விடுதலையை மையப்படுத்தி மக்கள் போராட்டம் நடத்திய ஆரம்ப காலத்தில், இந்தியா முழுவதும் தனித்தனி அமைப்புகளாக போராடினர். அவர்களை ஒரே மையப்புள்ளியில் ஒருங்கிணைக்க  ஒரு வலிமையான அமைப்பு தேவைப்பட்டது. அப்படி 1885 இல் பிரம்மஞான சபையைச் சேர்ந்த A.O Hume போன்றவர்களால்  உருவானதுதான் காங்கிரஸ் பேரியக்கம். ஆனால் அதன் இன்றைய செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் வரவேற்பை இழந்தது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என அதன் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் இந்திய விடுதலையை எதிர்நோக்கி தொடங்கப்பட்ட  பேராயக்கட்சியான  இந்திய தேசியக் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளும் தற்போது பொதுநல நோக்கத்தை மறந்து சுயநல நோக்கத்திற்காக செயல்பட்டு வருவதையும் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள். 
நீதிக்கட்சி
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் மாற்றாகவும் நவம்பர் 1916-ல் சென்னையில் உருவானதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation). இச்சங்கம் நீதிக்கட்சி (Justice Party) என்ற பெயரில்தான் பொதுமக்களால் அறியப்பட்டது.
இந்தக் கட்சியை ஆரம்பித்தவர்களின் முக்கிய நோக்கம் சமூகத்தில் பின்தங்கியோர் முன்னேற வேண்டும் என்பதுதான்.   அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியின் (தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) மக்கள் தொகை 4.75 கோடியாகவும், அதில் சமூக மேல்தட்டு மக்களின் எண்ணிக்கை வெறும் 75 லட்சமாகவும் இருந்தது. ஆனால் 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் உயர் சாதி வகுப்பினர். அதேபோல் உதவிப் பொறியாளர் தேர்வில் 21 பேரில் 17 பேர் மேட்டுக்குடியினர். அப்பொழுது பதவியில் இருந்த உதவி கலெக்டர்களில் 140 பேரில் 77 பேர் மேல்தட்டைச் சார்ந்தோர். அப்படியே நீதித்துறையில், 1913-ல் ஜில்லா முன்சீப்களின் 128 பேரில்  93 பேர்.  1915-ல் சென்னை மாகாணத்தில் கல்வி கற்றோர் தொகை 8%. ஆனால் உயர் வர்க்கத்தினரில் கல்வி கற்றோர் சதவிகிதம் 75. அதுவரையில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 650 பேரில் 452 பேர் மேல்சாதி மக்கள். 1916-ல் மாகாண அரசுப்பணியில் 129 பேரில் 100 பேர் பிராமணர். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் 16-ல் 15 பேர் இவர்களே.
முதலாம் உலகப்போர் நேரம். அப்பொழுதுதான் காந்தி இனவெறியின் பிடியில் சிக்கியிருந்த தென்னாப்பிரிக்காவிலிருந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்த  இந்தியாவிற்கு வந்திருந்தார். காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் 1915-ல் ஹோம் ரூல் இயக்கம் என்றொரு இயக்கத்தைக் கொண்டுவந்தார். கிளர்ச்சியின் மூலம் இந்தியாவுக்கு அதிகப்படியான அதிகாரத்தைப் பெறுதலே அந்த இயக்கத்தின் நோக்கம். ஐரோப்பாவில் போர் நடந்துகொண்டிருப்பதால் இந்தியா மீது அதிக நேரத்தைச் செலுத்த முடியாது என்பதால், பிரிட்டன் ஒருவேளை ஹோம் ரூல் எனப்படும் குறைந்த சுயாட்சியை வழங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு சில மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தது.
Justice_August_30_1937
ஆனால் 1916 இல்,  இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தால் அதனால் தென்னிந்தியாவில் மேல்சாதியினரின் ஆதிக்கம்தான் இருக்கும் என்று பல தலைவர்கள் நினைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி போய் பார்ப்பனர் ஆட்சி வரும் என்று நீதிக்கட்சித் தலைவர்களுக்குத்  தோன்றியது. அதனால் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்ப்பது என்றும், பார்ப்பனரல்லாதோர் நலனுக்காக கட்சி ஒன்றை உருவாக்குவது, சில பத்திரிகைகளை உருவாக்குவது என்றும் தீர்மானித்தனர். அதன் விளைவாக உருவானதே இந்த நீதிக்கட்சி. ஆங்கிலேயர் ஆட்சி தொடரவேண்டும் என்றும் அதன் தொடர்ச்சியில் பல சமூகத்தவரும் கல்வியில் முன்னேறி சகலவிதமான வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாக கிடைக்கும்போது சுயாட்சி கிடைத்தால், நாட்டில் சம நீதி இருக்கும் என்றும் நீதிக்கட்சியினர் நினைத்தனர். தமது கொள்கைகளை விளக்க நீதிக்கட்சியினர் ‘Justice’ என்ற ஆங்கிலத் தினசரி, ‘திராவிடன்’ என்ற தமிழ்த் தினசரி, ‘ஆந்திரப் பிரகாசினி’ என்ற தெலுங்குத் தினசரி ஆகியவற்றை தொடங்கினார்கள்.

காங்கிரசின் செயல்பாடுகளுக்கு எதிராக, பிராமணரல்லாதோர் தொடங்கிய நீதிக்கட்சியின் முதல் பொதுச்செயலராக இருந்தவர் சர். பிட்டி. தியாகராய செட்டியார். (சென்னையில் உள்ள தி.நகர் (தியாகராய  நகர்) இவர் பெயரில் அமைந்தது தான்). 1918-ல் முதலாம் உலகப்போர் முடிந்ததும், 1919-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இயற்றியிருந்த சட்டப்படி (Government of India Act, 1919) இந்தியாவில் மாகாணங்களுக்குத் தேர்தல் நடக்கும் என்றும், அதில் இந்தியர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் தீர்மானமானது. இந்த இந்திய உறுப்பினர்கள் பிரிட்டிஷ் கவர்னர்களின் கீழ் ஆட்சி செய்வார்கள். காங்கிரஸ் இந்தத் தேர்தலைப் எதிர்த்தது. காரணம், வடக்கிந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் காங்கிரசின் மாற்றாக இருந்த முஸ்லிம் லீக்கும், தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு  மாற்றாக இருந்த நீதிக்கட்சியும் இந்தத் தேர்தலை ஆதரித்தது தான்.
1937_Madras_Legislative_Assembly
இந்த சமயத்தில், அன்றைய சென்னை மாகாணத்தின் முதன்மந்திரியாக இருந்தவர் பனகல் ராஜா எனப்படும் ராமராய நிங்கார். (இவரது பெயரில்தான் சென்னையில் உள்ள  ‘பனகல் பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது) 1923-ல் மற்றுமொரு தேர்தல் நடந்தது. இதில் நீதிக்கட்சியின் ஆட்சி மீது அதிருப்தி அடைந்த சிலர் நீதிக்கட்சி வேட்பாளர்களையே எதிர்த்துப் போட்டியிட்டனர். அவர்களுள் முக்கியமானவர் நடேச முதலியார். நடேச முதலியார் வெற்றி பெற்றார். கவர்னர் தன்னைத்தான் ஆட்சியமைக்கக் கூப்பிடுவார் என்று நடேச முதலியார் எதிர்பார்த்தார். ஆனால் அவர் கட்சித்தலைவர் பிட்டி.தியாகராயரை  அழைக்க, அவரும் முன்போலவே பனகல் ராஜாவையே முதன்மந்திரியாக நியமித்தார். பிட்டி. தியாகராயர் கடைசிவரை எந்தப் பதவியும் வகிக்கவில்லை.
52330454
இந்த நேரத்தில்தான் தமிழர், ஆந்திரர் என்ற பிரிவினைப் பாகுபாடும் தோன்றியது. இரண்டாவது சட்டசபையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்று ஒரு கருத்து தோன்றி அதற்காக சில சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீதிக்கட்சியில் ஏற்பட்ட பல்வேறு உட்பூசல் காரணமாக 1926 தேர்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. அப்பொழுது காங்கிரஸ் தேர்தலில் பங்குகொள்ளாததால் காங்கிரஸ் சார்புக்கட்சியான சுயராஜ்யக் கட்சி அதிகபட்ச இடங்களைக் கைப்பற்றி முன்னணியில் இருந்தது. ஆனால் ஆட்சியை அமைக்கும் அளவுக்குப் அக்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. இப்படியிருக்க, சுயேச்சை உறுப்பினரான சுப்பராயன் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது. அவரை சுயராஜ்யக் கட்சி தொடக்கத்தில் ஆதரித்தாலும் பின்னர் அந்த அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது!. இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நீதிக்கட்சி, அன்றைய மந்திரிசபையை காப்பாற்றியது.
இதற்கிடையில் 1920-ல் காங்கிரசில் சேர்ந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1925-ல் காங்கிரஸ் தலைவர்களின் வர்ணாஸ்ரமக் கொள்கைகளால் வெறுப்புற்று காங்கிரஸை விட்டு விலகி  ‘சுயமரியாதை இயக்க’த்தைத் தொடங்கினார். அத்துடன்  அப்போது நீதிக்கட்சியையும் வெகுவாக ஆதரித்தார். 1930 தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. சில குழப்பங்களுடன் முதலில்,  ‘திவான் பகதூர் முனுசாமி நாயுடு’ முதலமைச்சரானார், பின் கட்சியினரின் அதிருப்தியால் பதவி விலகி  ‘பொப்பிலி ராஜா’ என்பவர் முதல் மந்திரியானார்.
ஆனால் இந்தச் சட்டசபை முடியும் நேரத்தில் நீதிக்கட்சி கலகலத்துப் போயிருந்தது. 1934 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. இந்நேரத்தில் நீதிக்கட்சியில் இருந்த  பலரும் காங்கிரஸில் சேர்ந்து அதன்மூலமாகவே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றலாம் என்று ஒரு தீர்மானத்திருந்தனர். அப்படியே பலரும் காங்கிரஸில் சேர்ந்தனர். ஆனால் காங்கிரஸில் அவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் கிடைக்கவில்லை.
1937-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் முதன்முறையாகப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெருவெற்றியும், நீதிக்கட்சி படுதோல்வியும் அடைந்தன. சி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் மந்திரி சபை அமைந்தது.
இந்த ஆட்சியின் போதுதான் இந்தித் திணிப்பும், அதன் எதிர்ப்பும் முதலில் தொடங்கியது. இந்தியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில்,  பெரியார் ஈ.வே.ரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது 1938-ல் நீதிக்கட்சியினர் கூடி பெரியாரையே கட்சியின் தலைவராக்க முடிவு செய்தனர்.
ஆனால், அதன் பின்னர் நீதிக்கட்சி எப்பொழுதும் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. நீதிக்கட்சி மறைந்து போய் பெரியார், திராவிடர் கழகத்தை ஏற்படுத்தி அரசியலமைப்பில் ஈடுபடாது தன் சமூக சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்பினார். ஆனால் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். அன்றுமுதல் இன்றுவரை திராவிட பாரம்பரியத்தின் வழிவந்த கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன.

பெரியார்
சுயமரியாதை சமூகத்தை உருவாக்க விரும்பியத்  தந்தை பெரியார்,  சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், குறிப்பாக  பெண் விடுதலைக்காகவும் போராடினார்.  பொது நலனிற்காகவே வாழ்ந்த இவர்,  காந்தியடிகளின் மீதான ஈர்ப்பினாலும்  காங்கிரசின் கொள்கைகளாளும் பெரிதும் கவரப்பட்டு, 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியக் கொள்கையான கள்ளுக்கடைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஈ.வெ.ரா பெரியார் தனது சொந்த தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டி வீழ்த்தினார். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு நீண்ட சிறைதண்டனையும் பெற்றார். சமூக நீதி, பெண்கள் விடுதலை, அனைவருக்கும் சம உரிமை  மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலன் என்று போராடத்துவங்கிய பெரியார், மூட நம்பிக்கைகளை களைய பெரிதும் முயன்றார்.
periyar4
1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் (தமிழ்நாடு காங்கிரஸ்) கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் அன்றைய காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத்தில் இருந்த வர்க்க பேதங்களினால் பெரிதும் மனமுடைந்தார், தந்தை பெரியார்.
சுயமரியாதை இயக்கம்:
1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வியடைந்ததால் காங்கிரசை விட்டு வெளியேறி தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அதே நேரத்தில் ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் இருந்து அறவே அகற்றுவதை’  முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சிகளை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல், கலப்பு மற்றும் சுயமரியாதைத் திருமண முறைகளுக்கும் தந்தை பெரியார் வழிகோலினார்.
anti_hindi_agitation_20081020

கோயில்களில் பின்பற்றப்பட்ட தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்ய போராடினார். அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.
Periyarkutiarasu
தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” அவர் தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,  மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார், பெரியார்.
பெங்களூரில் நடந்த ஒரு கூட்டத்தில்,   ‘ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கமுடியாது’ என காந்தியடிகளிடம் கடுமையாக பெரியார் வாதாடியது குறிப்பிடத்தக்கது.
இந்தி எதிர்ப்பு:
1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களைப் பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்துவிடும் என வலியுறுத்தி 1938- இல் நீதிக்கட்சியின் சார்பாக தந்தை பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்” தலைவராகப் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தர்களாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்.


Periyar_with_Rajaji
‘திராவிட இயக்கம்’ தமிழகத்தில் ஆட்சியை அமைக்க  விதையாகவும் வேராகவும் இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டக் களம் தான். பள்ளியில் கட்டாயப் பாடமாக இந்தியைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பிய இராஜாஜியின் (காங்கிரசின்) எண்ணமே அன்றைய ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
1937, ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று ராஜாஜி அறிவித்தது முதல் தமிழறிஞர்களால் இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் தமிழகமெங்கும் பிரச்சாரமாக முன்னெடுக்கபட்டது. குறிப்பாக, சென்னையை மையமாகக் கொண்டு போராட்டம் போராட்டம் பெரிய அளவில் நடந்தது.  மறியல், கைது என்று அடுத்தடுத்து  தொடர்ந்ததால் பெரிய மக்கள் திரள் போராட்டமாக மாறியது.
எதிர்ப்பின் வேகத்தை உணராத ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை கட்டாயமாக இந்தியைப் போதிக்கவேண்டும் என்று 21.4.1938 இல் உத்தரவு பிறப்பித்தார். இதன் பின்விளைவுகள் தெரிந்தும் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார் ராஜாஜி.  ‘சமஸ்கிருதத்தைப் படிப்படியாக புகுத்தவே முதலில் இந்தியைக் கொண்டு வந்தேன்’ என்று சென்னை லயோலா கல்லூரியில் வெளிப்படையாகவே  ராஜாஜி பேசியிருப்பது இதை உறுதிப்படுத்தும். ராஜாஜியின் இந்த கொள்கையால் இன்னும் தீவிரமாகப் போராடுவதென்று தமிழர்கள் முடிவு செய்தனர்.
கட்டாய இந்தி வந்துவிட்டால் தமிழ் சீரழிக்கப்படுவதுடன் (மொழிக்கலப்பு, மொழிச் சிதைவு ஏற்படுவதுடன்) தமிழர்கள் இரண்டாம் நிலைக் குடிமக்களாகத் தள்ளப்படுவார்கள் என்று  தமிழறிஞர்களிம் மத்தியில் எழுந்த பயம் தான் போராட்டத்திற்கு தீப்பொறியாக அமைந்தது.
web12ph254
மே மாதம் 28_ந்தேதி, நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் “தமிழ்ப் பாசறைக்” கூட்டம் நடந்தது. இதில், பெரியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், பட்டிவீரன்பட்டி.பி.ஏ.சவுந்தரபாண்டியனார், உமா மகேஸ்வரன், கே.எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல முக்கியத் தமிழார்வலர்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது குறித்து முடிவெடுத்தனர்.
தமிழின் மீதிருந்த பற்றினால் இந்திக்கு எதிரான இந்த போராட்டம் தமிழகம் எங்கும் தீயாகப்பரவியது. 1938_ம் ஆண்டு ஜுன் 3_ந்தேதி சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. ராஜாஜி வீட்டு முன்பாக மறியல் செய்து, பலர் கைதானார்கள். இந்தி எதிர்ப்பின் அவசியத்தை மக்களிடம் பரப்ப “தமிழர் பெரும்படை” என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது.
பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஜ.குமாரசாமிபிள்ளை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், “நகர தூதன்” ஆசிரியர் திருச்சி திருமலைசாமி ஆகியோர் தலைமையில், தமிழர் பெரும்படையினர் திருச்சி உறையூரிலிருந்து நடைபயணமாக சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.  கிட்டதட்ட 234 ஊர்களின் வழியாக, 42 நாட்கள் நடந்து இவர்கள் சென்னை நகரை அடைந்தனர். சென்னையின் எல்லையில் இவர்களை மறைமலை அடிகள் வரவேற்றார். சென்னை நகரத்தின் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் பொறுப்பை மீனாம்மாள் சிவராஜ் ஏற்றிருந்தார். கட்டாய  இந்தியை எதிர்த்து மாணவர்கள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துப் போராடினர். இப்படி தமிழகம் முழுவதும் பல தமிழறிஞர்கள் தலைமையில் போராட்டங்கள் வெகுவாக வெடித்தன. போராடியவர்களைக் கைதுசெய்து சிறை தண்டனை விதித்தது அரசு.
பெரியார், அண்ணா கைது:
போராட்டக்காரகளுக்குத் தலைமையேற்று இந்திப் பெயர்ப் பலகைகளை தார் பூசி அழிப்பது, மறியல் என கடுமையாக தனது எதிர்ப்பைத் தெரிவித்த பெரியார் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டு  சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1938, செப்டம்பர் 26 இல், அண்ணா கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஈழத்து சிவானந்த அடிகள், மறைமலையடிகளின் மகன் மறை.திருநாவுக்கரசு, குடந்தை எஸ்.கே.சாமி உள்ளிட்டவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியை எதிர்த்து முதல் பலி:
 nadarasan
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பலர் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி சிறையிலிருந்த தியாகி.நடராசன் ஜனவரி 15 இல் (1939) மரணமடைந்தார். தமிழகத்தில் மொழிப்பற்றை நிரூபிக்க விழுந்த முதல் பலி தியாகி நடராசன் மரணம்தான். அதைத் தொடர்ந்து தியாகி தாளமுத்துவும் மார்ச் – 11 இல் சிறையிலேயே மரணம் அடைந்தார். இந்த இரண்டு உயிர்பலியும்   தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் போர்க்களமாகிவிட்டதை சட்டசபையில் சர். ஏ.டி.பன்னீர்செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார், திவான் பகதூர் அப்பாத்துரைப்பிள்ளை ஆகியோர் விரிவாக எடுத்துக்கூறி விவாதித்தனர்.
இந்திக்கு இவ்வளவு கடும் எதிர்ப்பு இருக்கும் என்று ஆரம்பத்தில் ராஜாஜி நினைக்கவில்லை. போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து பெரியாரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். 167 நாள் சிறையிலிருந்த பெரியார், 22.4.1939 இல் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான 6 மாதங்களுக்குப்பின், போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். “போராட்ட வீரர்களை விடுதலை செய்ததற்கு நன்றி. ஆனால், கட்டாய இந்தி உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது” என்று பெரியாரும், மற்ற தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.
இந்த சூழலில், “பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதில்லை” என்ற தீர்மானத்தைக் காங்கிரஸ் மேலிடம் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரிசபைகள் பதவியை விட்டு விலகின. தமிழகத்தில் ராஜாஜி மந்திரிசபையும் 28.10.1939 இல் பதவி விலகியது. 21.2.1940 இல் கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றவர்களில் பெண்கள் உட்பட மொத்தம் 1,269 பேர். ஒருவழியாக முதற்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
 raajaaji
திராவிடர் கழகம்:
தான் தலைமையேற்று வழிநடத்தி வந்த ‘நீதிக்கட்சி’யின் பெயரை 1944-ல் ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு,  மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், ‘திராவிடநாடு’ அல்லது ‘தனித் தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் அறிஞர்  அண்ணா மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948  ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதைக் காரணம்காட்டி, அண்ணா தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
ki-a-pe-visuvanathan
குறிப்பாக நீதிக்கட்சியில் பணியாற்றிய கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் பங்கு அளப்பரியதாகும். ஆனால் அவரின் பங்கு குறித்து இன்றளவும் திராவிட இயக்க வரலாற்றில் முழுமையாக சொல்லப்படாமலே உள்ளது. 26.12.1937 அன்று திருச்சியில் முதன் முதலில் கி.ஆ.பெ.வி. “சென்னை மாநிலத் தமிழர் மாநாடு” பெயரில் இந்தி எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டினார். “தமிழனுடைய நாடு, படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய நூல் கடல் நீரால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது. தமிழனுடைய அறிவு புராணங்களால் மழுக்கப்பட்டது. தமிழனுடைய ஒற்றுமை சாதியால் பிரிக்கப்பட்டது….” என்று அவர் வெளியிட்ட அறிக்கை அனைத்து தமிழர்களையும் போராட்டத்தில் ஈர்க்கும்படி அமைந்தது.
 இராஜாஜி இந்தியை ஆதரித்து பேசிய போதெல்லாம் கி.ஆ.பெ. தனது வாதத்திறமையால் வென்று காட்டினார். உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம், இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ள இந்தி என இந்திமொழி ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்புவர். இவரோ, “பெரிய பூனைக்கு என்று ஒரு துளை செய்த பிறகு குட்டிப் பூனைக்காக ஒரு சிறு துளை செய்வது முட்டாள் தனம்” என்று பதில் தருவார். 1938இல் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.வி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின் தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. 95 வயது வரை ஒரு தமிழ்த் தேசியராகவேத் தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்த கி.ஆ.பெ.,  சாவதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த அறிக்கையில் “தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பாடமொழியாக்கினால் நான் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் சாவேன்” (மாலை முரசு 19.12.1994) என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Saturday, 1 February 2014

மின் இணைப்பு பெறுவது எப்படி?


மின் இணைப்பு பெறுவது அத்தியாவசியம். அதேபோல அதை சேமிப்பதும் மிக அவசியம். புதிய வீடு கட்டும்போது  தண்ணீர் மோட்டார் இயக்குவதற்கும், இரவில் பூச்சு வேலை போன்றவற்றிற்கும் மின்விளக்கு தேவைப்படும். இதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். வீடுகளுக்கு மட்டுமின்றி கடைகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு, விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி? எத்தனை நாட்களுக்குள் மின்  இணைப்பு வழங்க வேண்டும்? விவரங்கள் இங்கே. 
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகங்களிலும் இதற்கான விண்ணப்பத்தைப் பெறலாம். http://tnerc.tn.nic.in/  என்கிற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பெறலாம்.
 
விண்ணப்பத்தை எங்கே கொடுப்பது?
  • பூர்த்தி செய்யப்பட்ட முழு வடிவிலான விண்ணப்பம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அந்தப் பகுதி பிரிவு அலுவலரிடம் (அல்லது பிரிவு அலுவலர் இல்லாதிருப்பாரானால் அதிகாரமளிக்கப்பட்ட நபரிடம் ) ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
  • விண்ணப்பங்கள் / மனுக்கள் முழுமையடையாமல் இருந்தாலும்கூட மற்றும் அவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் கூட, பிரிவு அலுவலர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நபர் எழுத்து வடிவில் ஒப்புகை அளித்தல் வேண்டும்.
  • விண்ணப்பங்கள்/மனுக்கள் முறைப்படி இருக்குமானால், அவை உடனடியாக பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு ஒப்புகை அளிக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பம் முழுமை அடையாதிருக்குமானால்,  குறைபாடுகளை எழுத்து மூலம் சுட்டிக்காட்டி விண்ணப்பத்தை, விண்ணப்பதாரரிடம் / மனுதாரரிடம் திருப்பியளித்தல் வேண்டும்.
  • பதிவு செய்வதற்காகவும் மூப்புநிலையைக் கண்காணிப்பதற்காகவும் தனிப்பட்ட பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். பிரிவு அலுவலர் இல்லாதிருப்பாரானால், அதிகாரமளிக்கப்பட்ட நபர், மனுக்கள் / விண்ணப்பங்களைப் பெற்று, ஒப்புகை அளிப்பதற்காகவும், பதிவு செய்வதற்காகவும் அலுவலக நேரங்களில் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.
மின் இணைப்பு பெறுவதற்கான தகுதிகள்:
  • வீட்டின் சொந்தக்காரராக இருக்க வேண்டும் அல்லது நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
  • வீடு அல்லது நிலத்தின் உரிமையாளரிடமிருந்து அனுமதிக் கடிதம் வாங்கியிருக்க வேண்டும்.
மின் இணைப்பு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:
  • வீடு, நிலம், தொழிற்சாலை போன்றவற்றின் பட்டா மற்றும் பத்திரத்தின் நகல்.
  • வீடு மற்றும் தொழிற்சாலைகளின் கட்டிட அமைப்பின் நிழற்பட அச்சுமுறை நகல் (ப்ளூ பிரிண்ட்).
  • ஒயரிங் முழுவதுவமாக செய்யப்பட்டுவிட்டது என்பதற்கான அரசு அனுமதி பெற்ற எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரின் கடிதம் (அரசு அனுமதி பெற்ற மின்பொறியாளர்தான் ஒயரிங் செய்ய வேண்டும். அவர்தான் இந்தக் கடிதத்தையும் கொடுக்க வேண்டும்).
கட்டணம்
  • விண்ணப்பத்துடன் 50 ரூபாய் செயல்படுத்துவதற்கான தொகையாக டிமாண்ட் டிராஃப்ட் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
  •  தனி இணைப்பா, மும்முனை இணைப்பா என்பதைப் பொறுத்தும், போஸ்ட் அருகில் உள்ளதா? பில்லர் தேவைப்படுமா? டிரான்ஸ்ஃபார்மரில் லோடு போதுமானதாக இருக்கிறதா? கேபிள் இணைக்க வேண்டுமா என்பதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு தொகை மதிப்பீடு செய்து கூறப்படும். அந்தத் தொகையை மின் இணைப்பு பெறுவோர் செலுத்த வேண்டும்.
  • சில சமயங்களில் டிரான்ஸ்ஃபார்ம், கேபிள், பில்லர், போஸ்ட் போன்றவற்றிற்கான செலவை  மின் இணைப்பு பெறுவோரே கொடுக்க வேண்டியிருக்கலாம்.
எத்தனை நாளில் பெற முடியும்?
  • னைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் இருந்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைத்துவிடும்.
  • டிரான்ஸ்ஃபார்ம் போட வேண்டுமென்றால் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.
மின் இணைப்பின் பெயர் மாற்றம்:
ஒரு வீட்டை வேறொருவர் வாங்கும் பட்சத்தில் அதன் மின் இணைப்பையும் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு பட்டா, பத்திரம் மற்றும் உங்கள் பெயருக்கு ஒப்பந்தம் செய்த பதிவுகள் அனைத்தையும் கொடுத்து இணைப்பை உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். இதை 90 நாட்களுக்குள் செய்துகொள்ள வேண்டும்.

மற்ற செயல்பாடுகள்:
மின் நுகர்வோர், மின் வழங்குவதற்கான விண்ணப்பம் நீங்கலாக, பிரிவு அலுவலகத்தில் பின்வரும் சேவைகள் தொடர்பான விண்ணப்பங்கள்/ மனுக்களையும் கூட தாக்கல் செய்யலாம்.

மின் இணைப்பை இடமாற்றம் செய்தல், தற்காலிக மின் வழங்கல், மின் இணைப்பின் பெயர் மாற்றம், மின்கட்டண மாற்றம், பட்டியலிடலிலுள்ள முறையீடுகள்,  மின் அளவியை மாற்றிவைத்தல்,  மின் வழங்கல் தடை, மின் அழுத்தம் தொடர்பான முறையீடுகள்,  வைப்பீடுகளைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றிற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகத்தை அணுகலாம்.

மேலதிக தகவல் தொடர்புக்கு
மின்குறை தீர்ப்பாளர்,
எண்.19A, ருக்மினி லட்சுமிபதி சாலை,
எழும்பூர், சென்னை - 600 008
தொலைபேசி எண். 044-28411376
மின்னஞ்சல் – tnercnic.in

மின் நுகர்வோர் கவனத்திற்கு
மின்சார வாரியம் தன்னுடைய கடமையைச் செய்ய தாமதமானால் நுகர்வோருக்கு இழப்பீடு தருகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் நுகர்வோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாவிடில் உதாரணத்திற்கு மீட்டர் எரிந்து விட்டது என்று புகார் கொடுத்து 30 நாட்களுக்குள் சரி செய்துகொடுக்க வேண்டும். 30 நாட்களைக் கடந்துவிட்டால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை இழப்பீடு கொடுக்க வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கும் பட்சத்தில் 155333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரைப் பதிவு செய்து புகார் எண் வாங்கிக் கொள்ள வேண்டும். மாநகராட்சியெனில் ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். இழப்பீடு குறித்த மேலும் விவரங்கள் அறியவும், இழுத்தடிக்கப் படாமல் மின் இணைப்பு பெறவும் வழிகாட்டுகிறது இந்தியன் குரல். தொடர்புக்கு - 94443 05581

மயிர்க்கூச்செறிதல்


புளகாங்கிதம் அடைந்தேன். சிலிர்க்க வைக்கிற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். மயிர்க் கூர்ச்சு  அறிதல் என்பதற்கு புளகம் என்று ஓர்  அருமையான தமிழ்ச் சொல் இருக்கிறது, கூர்ச்சு என்றால் கூர்மை. Sharp என்று ஆங்கிலத்தில் சொல்கிறீர்களே அது. நம் தோலில் உள்ள உரோமங்கள் கூர்மையாகக் குத்திட்டு நிற்றல்தான் மயிர்க்கூர்ச்சு அறிதல் அல்லது புளகம்.

நீங்கள் காவிரியில் குளித்துக் கொண்டிருக்கிறீர்கள். மார்கழித் திங்கள் என்ற போதும் பகல் வேளையாதலால், ஆறு வெதவெதவென்று இதமாகத்தான் இருக்கிறது. கரையேறும்போது காற்று உங்களைக் கடந்து போகிறது. ஜில் என்ற குளிர் காற்று. கையைப் பார்க்கிறீர்கள். ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. உடலைத் துடைத்துக்கொண்டு ஆடை மாற்றி விட்டு வந்து ஒரு டிகிரி காபியை இளஞ்சூடாக ரசித்து ரசித்துப் பருகிவிட்டு தலையை ஆற்றப் பிரித்துப் போட்டுக்கொண்டு டி.வி. சுவிட்சைப் போடுகிறீர்கள். அதில்-

உங்களை அப்படியே அள்ளிக்கொண்டு போகிற பாட்டு. உங்கள் சிறுவயதில் உங்களைத் தூங்க வைக்க பாட்டி பாடி நீங்கள் கேட்டுக் கேட்டுக் கிறங்கிப் போன பாட்டு. கையைப் பார்க்கிறீர்கள். ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன.

இதுதான் மயிர்க்கூச்செறிதல். சரி, அது ஏன் ஏற்படுகிறது?

நம் தோலின் மேல் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றும் தோலுக்குக்கீழ் ஒரு மிக மிகச் சிறிய தசையில் (erector pilae) நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த நுண் தசைகள் சுருங்கும்போது தோலின் மேற்புறத்தில் அவை அழுத்தம் ஏற்பட்டு, மயிர்க்கால்கள் புடைத்தெழுகின்றன. ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. கோழியை உரிச்சா... அதன் தோல்ல சின்னச் சின்ன புடைப்பு இருக்கும் பார்த்திருக்கிறீர்களா, அந்த மாதிரி நம் தோலில் புடைப்பு ஏற்படும். அதனால் இதற்கு இங்கிலீஷ்காரன் Goose Pimple  என்று பெயர் வைத்திருக்கிறான் (Goose என்றால் வாத்து).

அந்த நுண் தசைகள் ஏன் சுருங்குகின்றன? அதற்குக் காரணம், அட்ரினலின் என்ற ஹார்மோன்.நம் சிறுநீரகங்களின் மேல், ஆம் ஆத்மி குல்லாய் போல் அமைந்துள்ள தம்மாத்துண்டு சுரப்பிகள். இந்த மூன்றங்குலச் சுரப்பிகள் எண்சாண் உடம்பெங்கும் ஓடக் கூடிய ரத்த ஓட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. நம் உணர்ச்சிகளோடு விளையாடக் கூடியவை.

நாம் குளிராக உணரும்போதோ, உணர்ச்சி வசப்படும்போதோ (பயம் கோபம், நாணம், காதல்) அட்ரினல் சுரப்பிகள் சுரக்கும். அட்ரினல் ரத்தத்தில் பாய ஆரம்பித்துவிடும். அதனால் நம் உடல் கதகதப்பாக இருக்கும். கதகதப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடுதான்  ரோமங்களும் குத்திட்டு நிற்கின்றன.      

இந்தப் புளகம் நம் பூர்வ ஜென்மப் பயன். அதாவது நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் சொத்து. நம் முன்னோர்கள் விலங்குகள் என்பதைப் பெருமையோடு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நிறைய ரோமங்கள் உள்ள விலங்குகளுக்கு குளிர் எடுக்கும்போதோ அல்லது அச்ச உணர்வு ஏற்படும்போதோ அவை குத்திட்டு நிற்கும். அதற்கு இரண்டு அவசியங்கள். ஒன்று, அப்படிக் குத்திட்டு நிற்கும்போது ரோமங்களுக்கிடையே உள்ள காற்று அதிகமாகி, அதன் காரணமாக கதகதப்பு ஏற்படும். இரண்டு, அந்த விலங்கின் உருவம் சடாரெனெப் பெரிதாகத் தெரிவதால் தாக்க வந்த விலங்குகள் அஞ்சும்.

பரிணாம வளர்ச்சியில் மனிதர்களாகிய நாம் இந்த ரோம சாம்ராஜ்யத்தை இழந்து விட்டோம். ஆனால் மரபணுக்களில் பதிந்திருந்த உணர்வுகள் கடத்தப்பட்டு நம்மிடமும் வந்து சேர்ந்துவிட்டன. அதனால் புளகம் நமக்கு உடல்ரீதியாகத் தேவையில்லாததாக ஆகிவிட்டது.

தேவை இல்லாததாக? இல்லை இல்லை. நாம் விலங்கிலிருந்து வந்தவர்கள் என்பதை இந்தச் சிறு ரோமங்கள் அவ்வப்போது நினைவூட்டுகிறதே!

சாவக்கட்டு!!!!!!!!!!!!!

 http://sathiyamweekly.com/wp-content/uploads/2014/01/SEVAL-SANDAI-1.jpg
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த இந்த தமிழ்மண்ணில் 16ஆம் நூற்றாண்டில் இந்த சேவல் சண்டை மிகவும் பிரபலம் அடைந்தது. போர் இல்லாத நேரங்களில் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருக்க இந்த சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. சேவல்சண்டையின் போது சேவல்களின் கால்களில் கத்தியை கட்டிவிட்டு அவற்றை மோதவிட்டு போர் வீரர்கள் பொழுதுபோக்கினர். இவ்வாறு சேவல்சண்டையிடும் களம் ‘சாவக்கட்டு’ என்று இன்றளவும் தமிழகத்தின் பல ஊர்களில் மருவி  அழைக்கப்படுகிறது.
மன்னர் காலத்தில் தொடங்கிய இந்த சேவல்சண்டை தமிழரின் கலாச்சாரமாக இன்றளவும் பொங்கல் நாட்களில் தொடந்து  நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி,  கரூர், அரவக்குறிச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவல் சண்டை போட்டி பிரபலம். கத்தி கட்டி சேவல்களை மோதவிடுவதால் சேவல்கள் அதிகம் இறக்க நேரிடுவதோடு, ரத்தகோரத்தோடு சண்டை நடத்தப்படுவதால் அதற்கு மிருக வதை எதிர்ப்பு எழும்பவே கத்தி கட்டி சண்டையிடும் முறைக்கு அரசாங்கம் தடைவிதித்தது. நீதிமன்ற அனுமதியுடன் அந்தந்த  மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி தற்போது சேவல் சண்டை போட்டி கத்திகட்டப்படாத  வெற்றுக்கால் சேவல் சண்டைபோட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.
SEVAL SANDAI 2
சண்டைசேவலை பெட்டைகோழியுடன் இணையவைத்து முட்டையிலிருந்து வெளிவரும் போதே குஞ்சுபருவத்திலேயே சண்டைசேவலை பிரித்தெடுத்து மற்ற கோழிகளுடன் சேரவிடாமல் எப்போதும் தனியாக கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர். நூரி, ஜாவா, சீத்தா, யாகூத்து, ஜகரியாகூத்து, தும்மரியாகுத்து, ஜரிதியாபிகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சண்டைச்சேவல் வகைகள் உள்ளன. போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பு எந்தசேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது ‘ஜோடி சேர்த்தல்’ என்று அழைக்கப்படுகிறது. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஜோடி சேர்க்கப்படுகிறது.
அப்போதிருந்தே சண்டைசேவல்களுக்கு காலை, மாலை என இருவேளைகளில் பாதாம் பருப்பு உணவாக கொடுக்கப்படுகிறது. மேலும் பிஸ்தா, பேரீச்சம்பழம், தேன் ஆகியவற்றை கலந்து உருண்டையாகப் பிடித்தும் தினந்தோறும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களும் அரைத்து தோசைக்களில் வைத்து சுட்டுகொடுக்கிறார்கள். சேவல்களுக்கு சுடு ஒத்தடம் செய்து பராமரிக்கிறார்கள். இவை தவிர ஒருநாள் உடற்பயிற்சியும், மறுநாள் நீச்சல்பயிற்சி என மாறிமாறி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
SEVAL SANDAI 3
இது குறித்து சண்டைசேவல் வளர்ப்பவர்களான  தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை  சேர்ந்த ஜகாங்கீர்  மற்றும் புதுக்கோட்டை சேகர் உள்ளிட்டோரிடம் கேட்டபோது சண்டை சேவல்களை தங்கள் பிள்ளைகளை போல்  பேணி, கவனமாக  பராமரித்து சண்டையில் வெற்றிபெறவேண்டி நாள்தோறும் சத்தான உணவு வகைகளை வழங்குவதுடன் வெண்ணீரால் சேவலின் உடலை தடவி கொடுப்பது, இறக்கைகளை இழுத்துவிடுவது, கழுத்து பகுதியை நீவி விடுவது போன்ற தனிப் பயிற்சி அளித்து சண்டைசேவல்களை வலுபடுத்துவதாக தெரிவித்தனர்.
அடுத்து,  சண்டைக்கு முன்னதாக சேவல்களின் கால் நகங்களையும், காலில் இருக்கும் முட்களையும் கூர்மையாக்கி தயார் செய்கிறார்கள். 15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் ஒய்வு என ஒரு மணிநேரம் சண்டைநீடிக்கிறது. இதில் சேவல் சோர்வில் விழுந்துவிட்டால் அல்லது சண்டையில் இறந்துவிட்டால் அந்த சேவல் தோற்றதாகவும் அறிவிக்கப்பட்டு வென்ற சேவலின் உரிமையாளருக்கு சண்டை களத்திலேயே தக்க பரிசுகள் வழங்கப்படுகிறது. அநேக இடங்களில் தோற்ற சேவலையும் வென்றவருக்கு பரிசாக அளிக்கின்றனர். இப்படி தோற்ற சேவல்கள் உறவு முறைக்கு உடனே விருந்துணவாக அளிக்கப்படுகின்றன.
சமீபத்தில் ஐனவரி 18,19ம் தேதிகளில் தஞ்சாவூர் ஞானம்நகரில் சமுத்திரம் ஏரி தென்கரையில் இந்த வெற்றுக்கால் சேவல்சண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய தென்மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் அதிகமான  சேவல்கள் பங்கேற்றன. வடஅமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது சேவல்சண்டைகள் பிரபலமாகி வருகிறது. தமிழகத்தில் பன்நெடுங்காலமாக சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வந்தாலும் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் சேவல்சண்டை இளைஞர்களையும் ஈர்த்துள்ளது.

Thursday, 23 January 2014

வாடகை வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?

இன்றைக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதே  பிரச்சினையாக இருப்பது ஒருபுறம். அப்படியே கிடைத்தாலும் சொல்லும் கண்டிஷனுக்கெல்லாம் ஆமாம் போட்டுவிட்டு குடியேறினால் அடுத்த வருடமே வாடகையை உயர்த்துவது, மின்சாரக் கட்டணம் அதிகமாகக் கேட்பது எனப் பல பிரச்சினைகளை அடுத்தடுத்து சந்திக்க வேண்டியிருக்கிறது. இது தவிர வாடகைக்குக் குடிவருபவர்களும் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவதுண்டு. எனவே வாடகை வீட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோம்.

முன்பணம்
வீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே பெறப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஒப்பந்தம்
  • முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட் / ஒப்பந்தம் எழுதிக் கொள்வது அவசியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் எழுதிக் கொள்வது மிக அவசியம்.
  • ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, மின் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.
ரசீது
வாடகைக்குப் குடியிருப்பவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்கென அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

வாடகை அதிகமாக வசூலித்தால்:
  • தாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை இரண்டு என்ஜினீயர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள்.
  • வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.
வீட்டைக் காலிசெய்ய வைக்க:
  • தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2-யின்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை நீ ஓனரே இல்லை எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.
  • தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 –யின்படி வீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்லலாம்.
  • தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு  14 பி-யின்படி வீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.
குடியிருப்போருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் பிரச்சினை எனில்:
  • வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.
  • வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.
வீட்டு உரிமையாளர்களின் கவனத்திற்கு:
  • குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.
  • அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும்.
  • வீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடியிருப்பவர் அதற்கான நஷ்டஈடு கோரலாம்.
  • இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.
மின் கட்டணப் பிரச்சினைக்கு:
வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் அதிக மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது. ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரே மின் இணைப்பில், பல வீடுகள் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், ஒரே இணைப்புக்கு கூடுதல் மின் மீட்டர் இணைப்புகளை கூடுதல் வைப்புத்தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்த முன்வருவதில்லை.

இந்திய மின்சாரச் சட்டம் 2003-யின்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தைத்தான், மின் பகிர்மான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் மீட்டருக்கு மேல் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது மீட்டரில் பதிவான யூனிட்டுகளை கணக்கிட்டு, ஒரு யூனிட்டுக்கு சூ7 முதல் சூ9 வரை வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர்.

வீடு வாடகைக்கு எடுக்கும் போதே மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம் குறித்து வீட்டு உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்ய வேண்டும். மின்சாரச் சட்டப்படி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு 3 மாதச் சிறைத் தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிகள் உள்ளன.

வாடகை வீடு சட்டம்:
தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டப்படி ஒரு வீட்டின் வாடகை என்பது அந்த வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு  9 சதவிகிதமும், குடோன், கடை போன்ற கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும் (அதாவது ஒரு வீட்டின் மதிப்பு 10 லட்சம் என்றால் 9 சதவிகிதம் வைத்துக் கணக்கிட வேண்டும். வருடத்திற்கு 90,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 7,500 ரூபாய் வரும்).

அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது. மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும்.


இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப் பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம்.

நாட்டின் கடல் எல்லையை எப்படி கணக்கிடுகிறார்கள்?

மண்ணில் வேலி போடலாம், வானில் வேலி போடமுடியுமா என ராமகிருஷ்ணரை மேற்கோள் காட்டி பாரதியார் கேள்வி போடறார். இந்தக் கேள்வி ஐ.நா. சபைக்குக் கேட்டிருச்சோ என்னவோ, 1982-இல் ஒரு கூட்டம் போட்டாங்க. United Nations Convention on the Law of the Sea என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது..

கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.

கரையில் இருந்து ஆறு கடல் மைல். இதை நாட்டிகல் மைல் (‡Nautical mile)  என்றும் சொல்வார்கள். ஒரு நாட்டிகல் மைல் என்பது 1.85 கி.மீ.  தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’ அதாவது ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடல் பகுதி (territorial waters). இதில் அந்த நாட்டைச் சேர்ந்த கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்’ (contiguous) என்று அழைக்கப்படுகிறது. இதுவும் கரைக்கடல் மீது உரிமை உள்ள நாட்டின் ஆளுகைக்குட்பட்டதுதான். அந்த நாடு அண்மைக் கடற்பரப்பில் செல்லும் படகுகள்,  சிறுகப்பல்களிடமிருந்து சுங்க வரி, வேறு பல கட்டணங்களை வசூலிக்கவும், குடியமர்தல், சுகாதாரம் தொடர்பான சட்டங்கள் இவை தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் சட்ட, விதிமுறை மீறல்களைத் தடுக்கவும் அதிகாரம் பெற்றது. இதில் அந்த நாட்டின்  விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன்பின் 200 கடல் மைல் தொலைவிற்கு உள்ளது தனிப் பொருளாதாரக் கடல் பகுதி (Exclusive Economic ). இந்தப் பகுதியில் இதன் தரைப்பரப்பில் உள்ள கனிமங்கள், பெட்ரோலிய வளம் ஆகியவை அதற்கு அண்மையில் கரையைக் கொண்டுள்ள நாட்டிற்கு உரியது. இதற்கு அப்பால் உள்ளது உலகினர் அனைவருக்கும் உரிமை உள்ள ஆழி.

சுருக்கமாகச்  சொன்னால் ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து  12 கடல் மைல் (சுமார் 22.2 கி.மீ.) தொலைவிற்குள் உள்ள கடல் பகுதியில்    பயணிகள் கப்பல் போகலாம். ஆனால், மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள்  செல்வதற்கு, அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

மீன்பிடிப் படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் பறக்க வேண்டும். இவையெல்லாம் ஐ.நா. அமைப்பு வகுத்தளித்திருக்கும் சட்டங்கள். இதனை ஏற்று இந்த ஒப்பந்தத்தில் இதுவரையிலும் இந்தியா, இலங்கை உட்பட 158 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.

18-ஆம் நூற்றாண்டில் இருந்து 20-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஒரு நாட்டின் கடல் எல்லை, ஆறு கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்தது.  ஏனெனில், அப்போது இருந்த பீரங்கிகள் வீசுகின்ற குண்டுகள், ஆறு கிலோ மீட்டருக்கு மேல் பாயாது.

இப்போது கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்து விட்டன. என்றாலும், சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகள், தங்களுடைய கடல் எல்லையை, 6 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொண்டு உள்ளன.

சரி, இரு நாடுகளுக்கு இடையே உள்ள கடலின் அளவு 12+12 கடல் மைலுக்கும் (அதாவது 44 கி.மீ.க்கும். குறைவாக இருந்தால் என்ன செய்வது?

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பரப்பின் அகலம் 25 கிலோ மீட்டர்கள்தாம். இத்தகைய சூழலில், இரண்டு நாடுகளும் பேசி, கடல் எல்லையைச் சரிபாதியாக வகுத்து, ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தியா, இலங்கையிடையே அத்தகைய ஒப்பந்தங்களும் உள்ளன.

ஆனாலும் பிரச்சினையும்  இருந்து வருகிறது. உண்மையில் பிரச்சினை எல்லை இல்லை. மீன்கள்தான். இப்போது கரை ஓரங்களில் மீன் வளம் குறைந்து விட்டது. எனவேதான், மீனவர்கள், அண்மைக் கடலையும் தாண்டிச் செல்லுகிறார்கள் எனச்  சொல்லப்படுகிறது.

அரசியல்வாதிகள் தீர்க்க முடியாத பிரச்சினையை அறிவியல் தீர்த்துவிடும். அட, என் காலரை ஏன் பார்க்கறீங்க. நான் அதைத் தூக்கிவிட்டுக்கிட்டு அலையறேனா என்ன?

சின்னப் பிள்ளைங்க இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சிருக்காங்க. அறிவியலின் துணையோடுதான். மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தகவல் தொடர்பியல் மாணவிகள் அஸ்வினி, தீபீகா, திவ்ய தேவி, மணிமொழி, அமுதா ஆகிய  மாணவிகள் ஒரு கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டினால் அந்தக் கருவி எச்சரிக்கை செய்வதோடு, படகின் என்ஜினையும் ஆஃப் செதுவிடும். படகு மேலே நகரமுடியாமல் நின்று விடும்.

இந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது?   செயற்கைக்கோளின் உதவியோடு, கணினி மூலம் பூமியில் ஒருவரின் நடமாட்டங்களை வழி நடத்த முடியும். இதற்கு குளோபல் பொசிஷனிங்  சிஸ்டம் (GPS) என்று பெயர். இந்த GPS கருவியோடு,  சர்வதேசக் கடல் எல்லைகள் பற்றிய கம்ப்யூட்டர் சிப் ஆகியவை கொண்டது மாணவிகளின் கருவி. கடலில் எல்லையை நெருங்குவதற்கு 10 மீட்டர் இருக்கும்போது முன் பதிவு செய்யப்பட்ட குரல் ஒன்று படகில் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யும். அதையும் தாண்டிப் போவார்களானால், சென்சர் மூலம் என்ஜினை நிறுத்திவிடும் (காண்க: ‘புதிய தலைமுறை கல்வி’ 12 ஆகஸ்ட் 2013 இதழ்).


கடலுக்குப் போகிறவர்கள் கவர்மெண்ட்டை நம்புவதற்குப் பதில் இந்தக் கருவியை நம்பலாம்.