மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஒரு அரசியல் சார்பு இருப்பதை யாரும் மறுப்பதற்க்கில்லை. டார்வினின் கோட்பாடுகளின்படி மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து இந்த அறிவார்ந்த நிலைக்கு வருவதற்குள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறான் என்பது வரலாற்றுச் சான்று. மனிதனின் இந்த வளர்ச்சிக்கு சமூகம், பண்பாடு, கலாச்சாரம், அரசியல், போர்முறை, பொருளாதாரம், சித்தாந்தம் என ஒவ்வொன்றும் அரும் பங்களித்திருத்திருக்கின்றன.
நாடோடிகளாகத் திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்து ஆற்றங்கரையில் வாழத்தொடங்கிய காலம் என்பது மனித வளர்ச்சிப் பாதையின் முதல்படி எனலாம். இனக்குழுக்களாக வாழத்தொடங்கிய மனிதன் அனுபவம் வாய்ந்த குழுத் தலைவனின் நெறிப்படி வாழத்தொடங்கினான். பண்பார்ந்த ஒரு இனக்குழுத் தலைவனின் அடுத்த வளர்ச்சிப் படிநிலைதான் அரசன் எனும் தலைவன் ஆட்சிமுறை உருவாகியது.
சங்க காலத்தில் மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தமிழகம் பொற்கால ஆட்சியைக் கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகிறார்கள். காரணம் அவர்களுடைய சிறப்பான ஆட்சிமுறை. அதன்பிறகு பிற்கால சோழர்கள் ஆட்சிதான் தமிழகத்தில் ஒரு நிலைத்த ஆட்சியை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம், மக்கள் நலனை முன்படுத்திய அரசாட்சி முறை.

இந்தியாவின் பல நிகழ்வுகளுக்கு தமிழர்களின் நாகரீகம் தான் முன்னோடி. அதில் நாம் பெருமையடைவதில் தவறேதுமில்லை. ராஜராஜசோழன் காலத்தில்தான் குடவோலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது மக்கள் தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை அவர்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் இன்றைய ஜனநாயக தேர்தல் முறைக்கு முன்னோடி. இப்படியாக, அரசியலில் மட்டுமின்றி, இன்றைய நாகரீகத்தின் எல்லா துறைகளிலும் தமிழகத்தின் முதல் பதிவு இருக்கும்.
தவிர்க்கமுடியாத காரணியாக நம் வாழ்வோடு ஒன்றியிருக்கும் நம் தமிழக அரசியல் உருவான சூழலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அரசியல் சக்திகள் மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றன. தலைவர்களுடைய பேச்சாற்றல், அவர்களுடைய செயல்பாடுகள் என மக்கள் நம்பிக்கைக்கு காரணமான ஏதோ ஒன்று அவர்களை ஈர்த்திருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு, மொழிப் பிரச்சனை, இனப்பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால், மக்கள் ஆளும் கட்சிகளை புரட்டிப்போட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் பதிந்திருக்கிறது. சமூக மாற்றத்தை மையப்படுத்தி உருவாகிய பல இயக்கங்களும் நம் வரலாற்றில் உண்டு. சில கட்சிகள் வந்த வேகத்தியே மறைந்த நிகழ்வுகளும் நம் அரசியல் வரலாற்றில் உண்டு. ராஜாஜி தொடங்கிய சுதந்திரா காங்கிரஸ், ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கட்சி, ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி, எஸ்.டி.சோமசுந்தரத்தின் நமது கழகம், நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டவர்கள் துவக்கிய மக்கள் தி.மு.க. போன்ற எண்ணற்ற கட்சிகள் தமிழகத்தில் மிக எதிர்பார்ப்போடு துவக்கப்பட்டு பின்னர் காணாமல் போய்விட்டன.

மக்கள் மனநிலையை புரிந்து கொண்ட பல இயக்கங்கள், அரசியல் கட்சிகளாக அவதாரமெடுத்து சாதனை படைத்திருப்பதும் நம் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் தமிழக அரசியல் உருவான வரலாற்றை அலசும் கட்டுரையாக இந்த தொடர் கட்டுரையை உருவாக்க முற்பட்டுள்ளோம்.

மன்னராட்சி காலத்திற்குப் பிறகு ஆங்கிலேயரின் கட்டுகுள் வந்தது, இந்திய அரசியல். அதை மீட்டெடுக்கும் பொருட்டு விடுதலை போராட்ட உணர்வோடு தொடங்கப்பட்ட இயக்கமே காங்கிரஸ் பேரியக்கமாகும். இந்திய விடுதலையை மையப்படுத்தி மக்கள் போராட்டம் நடத்திய ஆரம்ப காலத்தில், இந்தியா முழுவதும் தனித்தனி அமைப்புகளாக போராடினர். அவர்களை ஒரே மையப்புள்ளியில் ஒருங்கிணைக்க ஒரு வலிமையான அமைப்பு தேவைப்பட்டது. அப்படி 1885 இல் பிரம்மஞான சபையைச் சேர்ந்த A.O Hume போன்றவர்களால் உருவானதுதான் காங்கிரஸ் பேரியக்கம். ஆனால் அதன் இன்றைய செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் வரவேற்பை இழந்தது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என அதன் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் இந்திய விடுதலையை எதிர்நோக்கி தொடங்கப்பட்ட பேராயக்கட்சியான இந்திய தேசியக் காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளும் தற்போது பொதுநல நோக்கத்தை மறந்து சுயநல நோக்கத்திற்காக செயல்பட்டு வருவதையும் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
நீதிக்கட்சி
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் மாற்றாகவும் நவம்பர் 1916-ல் சென்னையில் உருவானதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation). இச்சங்கம் நீதிக்கட்சி (Justice Party) என்ற பெயரில்தான் பொதுமக்களால் அறியப்பட்டது.
இந்தக் கட்சியை ஆரம்பித்தவர்களின் முக்கிய நோக்கம் சமூகத்தில் பின்தங்கியோர் முன்னேற வேண்டும் என்பதுதான். அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியின் (தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) மக்கள் தொகை 4.75 கோடியாகவும், அதில் சமூக மேல்தட்டு மக்களின் எண்ணிக்கை வெறும் 75 லட்சமாகவும் இருந்தது. ஆனால் 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் உயர் சாதி வகுப்பினர். அதேபோல் உதவிப் பொறியாளர் தேர்வில் 21 பேரில் 17 பேர் மேட்டுக்குடியினர். அப்பொழுது பதவியில் இருந்த உதவி கலெக்டர்களில் 140 பேரில் 77 பேர் மேல்தட்டைச் சார்ந்தோர். அப்படியே நீதித்துறையில், 1913-ல் ஜில்லா முன்சீப்களின் 128 பேரில் 93 பேர். 1915-ல் சென்னை மாகாணத்தில் கல்வி கற்றோர் தொகை 8%. ஆனால் உயர் வர்க்கத்தினரில் கல்வி கற்றோர் சதவிகிதம் 75. அதுவரையில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 650 பேரில் 452 பேர் மேல்சாதி மக்கள். 1916-ல் மாகாண அரசுப்பணியில் 129 பேரில் 100 பேர் பிராமணர். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் 16-ல் 15 பேர் இவர்களே.
முதலாம் உலகப்போர் நேரம். அப்பொழுதுதான் காந்தி இனவெறியின் பிடியில் சிக்கியிருந்த தென்னாப்பிரிக்காவிலிருந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவிற்கு வந்திருந்தார். காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் 1915-ல் ஹோம் ரூல் இயக்கம் என்றொரு இயக்கத்தைக் கொண்டுவந்தார். கிளர்ச்சியின் மூலம் இந்தியாவுக்கு அதிகப்படியான அதிகாரத்தைப் பெறுதலே அந்த இயக்கத்தின் நோக்கம். ஐரோப்பாவில் போர் நடந்துகொண்டிருப்பதால் இந்தியா மீது அதிக நேரத்தைச் செலுத்த முடியாது என்பதால், பிரிட்டன் ஒருவேளை ஹோம் ரூல் எனப்படும் குறைந்த சுயாட்சியை வழங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு சில மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தது.

ஆனால் 1916 இல், இந்தியாக்கு சுதந்திரம் கிடைத்தால் அதனால் தென்னிந்தியாவில் மேல்சாதியினரின் ஆதிக்கம்தான் இருக்கும் என்று பல தலைவர்கள் நினைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சி போய் பார்ப்பனர் ஆட்சி வரும் என்று நீதிக்கட்சித் தலைவர்களுக்குத் தோன்றியது. அதனால் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்ப்பது என்றும், பார்ப்பனரல்லாதோர் நலனுக்காக கட்சி ஒன்றை உருவாக்குவது, சில பத்திரிகைகளை உருவாக்குவது என்றும் தீர்மானித்தனர். அதன் விளைவாக உருவானதே இந்த நீதிக்கட்சி. ஆங்கிலேயர் ஆட்சி தொடரவேண்டும் என்றும் அதன் தொடர்ச்சியில் பல சமூகத்தவரும் கல்வியில் முன்னேறி சகலவிதமான வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாக கிடைக்கும்போது சுயாட்சி கிடைத்தால், நாட்டில் சம நீதி இருக்கும் என்றும் நீதிக்கட்சியினர் நினைத்தனர். தமது கொள்கைகளை விளக்க நீதிக்கட்சியினர் ‘Justice’ என்ற ஆங்கிலத் தினசரி, ‘திராவிடன்’ என்ற தமிழ்த் தினசரி, ‘ஆந்திரப் பிரகாசினி’ என்ற தெலுங்குத் தினசரி ஆகியவற்றை தொடங்கினார்கள்.
காங்கிரசின் செயல்பாடுகளுக்கு எதிராக, பிராமணரல்லாதோர் தொடங்கிய நீதிக்கட்சியின் முதல் பொதுச்செயலராக இருந்தவர் சர். பிட்டி. தியாகராய செட்டியார். (சென்னையில் உள்ள தி.நகர் (தியாகராய நகர்) இவர் பெயரில் அமைந்தது தான்). 1918-ல் முதலாம் உலகப்போர் முடிந்ததும், 1919-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இயற்றியிருந்த சட்டப்படி (Government of India Act, 1919) இந்தியாவில் மாகாணங்களுக்குத் தேர்தல் நடக்கும் என்றும், அதில் இந்தியர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் தீர்மானமானது. இந்த இந்திய உறுப்பினர்கள் பிரிட்டிஷ் கவர்னர்களின் கீழ் ஆட்சி செய்வார்கள். காங்கிரஸ் இந்தத் தேர்தலைப் எதிர்த்தது. காரணம், வடக்கிந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் காங்கிரசின் மாற்றாக இருந்த முஸ்லிம் லீக்கும், தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு மாற்றாக இருந்த நீதிக்கட்சியும் இந்தத் தேர்தலை ஆதரித்தது தான்.

இந்த சமயத்தில், அன்றைய சென்னை மாகாணத்தின் முதன்மந்திரியாக இருந்தவர் பனகல் ராஜா எனப்படும் ராமராய நிங்கார். (இவரது பெயரில்தான் சென்னையில் உள்ள ‘பனகல் பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது) 1923-ல் மற்றுமொரு தேர்தல் நடந்தது. இதில் நீதிக்கட்சியின் ஆட்சி மீது அதிருப்தி அடைந்த சிலர் நீதிக்கட்சி வேட்பாளர்களையே எதிர்த்துப் போட்டியிட்டனர். அவர்களுள் முக்கியமானவர் நடேச முதலியார். நடேச முதலியார் வெற்றி பெற்றார். கவர்னர் தன்னைத்தான் ஆட்சியமைக்கக் கூப்பிடுவார் என்று நடேச முதலியார் எதிர்பார்த்தார். ஆனால் அவர் கட்சித்தலைவர் பிட்டி.தியாகராயரை அழைக்க, அவரும் முன்போலவே பனகல் ராஜாவையே முதன்மந்திரியாக நியமித்தார். பிட்டி. தியாகராயர் கடைசிவரை எந்தப் பதவியும் வகிக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் தமிழர், ஆந்திரர் என்ற பிரிவினைப் பாகுபாடும் தோன்றியது. இரண்டாவது சட்டசபையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்று ஒரு கருத்து தோன்றி அதற்காக சில சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீதிக்கட்சியில் ஏற்பட்ட பல்வேறு உட்பூசல் காரணமாக 1926 தேர்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. அப்பொழுது காங்கிரஸ் தேர்தலில் பங்குகொள்ளாததால் காங்கிரஸ் சார்புக்கட்சியான சுயராஜ்யக் கட்சி அதிகபட்ச இடங்களைக் கைப்பற்றி முன்னணியில் இருந்தது. ஆனால் ஆட்சியை அமைக்கும் அளவுக்குப் அக்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. இப்படியிருக்க, சுயேச்சை உறுப்பினரான சுப்பராயன் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது. அவரை சுயராஜ்யக் கட்சி தொடக்கத்தில் ஆதரித்தாலும் பின்னர் அந்த அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது!. இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நீதிக்கட்சி, அன்றைய மந்திரிசபையை காப்பாற்றியது.
இதற்கிடையில் 1920-ல் காங்கிரசில் சேர்ந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1925-ல் காங்கிரஸ் தலைவர்களின் வர்ணாஸ்ரமக் கொள்கைகளால் வெறுப்புற்று காங்கிரஸை விட்டு விலகி ‘சுயமரியாதை இயக்க’த்தைத் தொடங்கினார். அத்துடன் அப்போது நீதிக்கட்சியையும் வெகுவாக ஆதரித்தார். 1930 தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. சில குழப்பங்களுடன் முதலில், ‘திவான் பகதூர் முனுசாமி நாயுடு’ முதலமைச்சரானார், பின் கட்சியினரின் அதிருப்தியால் பதவி விலகி ‘பொப்பிலி ராஜா’ என்பவர் முதல் மந்திரியானார்.
ஆனால் இந்தச் சட்டசபை முடியும் நேரத்தில் நீதிக்கட்சி கலகலத்துப் போயிருந்தது. 1934 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. இந்நேரத்தில் நீதிக்கட்சியில் இருந்த பலரும் காங்கிரஸில் சேர்ந்து அதன்மூலமாகவே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றலாம் என்று ஒரு தீர்மானத்திருந்தனர். அப்படியே பலரும் காங்கிரஸில் சேர்ந்தனர். ஆனால் காங்கிரஸில் அவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் கிடைக்கவில்லை.
1937-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் முதன்முறையாகப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெருவெற்றியும், நீதிக்கட்சி படுதோல்வியும் அடைந்தன. சி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் மந்திரி சபை அமைந்தது.
இந்த ஆட்சியின் போதுதான் இந்தித் திணிப்பும், அதன் எதிர்ப்பும் முதலில் தொடங்கியது. இந்தியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில், பெரியார் ஈ.வே.ரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது 1938-ல் நீதிக்கட்சியினர் கூடி பெரியாரையே கட்சியின் தலைவராக்க முடிவு செய்தனர்.
ஆனால், அதன் பின்னர் நீதிக்கட்சி எப்பொழுதும் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. நீதிக்கட்சி மறைந்து போய் பெரியார், திராவிடர் கழகத்தை ஏற்படுத்தி அரசியலமைப்பில் ஈடுபடாது தன் சமூக சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்பினார். ஆனால் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். அன்றுமுதல் இன்றுவரை திராவிட பாரம்பரியத்தின் வழிவந்த கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன.
பெரியார்
சுயமரியாதை சமூகத்தை உருவாக்க விரும்பியத் தந்தை பெரியார், சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், குறிப்பாக பெண் விடுதலைக்காகவும் போராடினார். பொது நலனிற்காகவே வாழ்ந்த இவர், காந்தியடிகளின் மீதான ஈர்ப்பினாலும் காங்கிரசின் கொள்கைகளாளும் பெரிதும் கவரப்பட்டு, 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியக் கொள்கையான கள்ளுக்கடைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஈ.வெ.ரா பெரியார் தனது சொந்த தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டி வீழ்த்தினார். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு நீண்ட சிறைதண்டனையும் பெற்றார். சமூக நீதி, பெண்கள் விடுதலை, அனைவருக்கும் சம உரிமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலன் என்று போராடத்துவங்கிய பெரியார், மூட நம்பிக்கைகளை களைய பெரிதும் முயன்றார்.

1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் (தமிழ்நாடு காங்கிரஸ்) கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் அன்றைய காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத்தில் இருந்த வர்க்க பேதங்களினால் பெரிதும் மனமுடைந்தார், தந்தை பெரியார்.
சுயமரியாதை இயக்கம்:
1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வியடைந்ததால் காங்கிரசை விட்டு வெளியேறி தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அதே நேரத்தில் ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் இருந்து அறவே அகற்றுவதை’ முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சிகளை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல், கலப்பு மற்றும் சுயமரியாதைத் திருமண முறைகளுக்கும் தந்தை பெரியார் வழிகோலினார்.

கோயில்களில் பின்பற்றப்பட்ட தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்ய போராடினார். அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.

தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” அவர் தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும், மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார், பெரியார்.
பெங்களூரில் நடந்த ஒரு கூட்டத்தில், ‘ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கமுடியாது’ என காந்தியடிகளிடம் கடுமையாக பெரியார் வாதாடியது குறிப்பிடத்தக்கது.
இந்தி எதிர்ப்பு:
1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களைப் பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்துவிடும் என வலியுறுத்தி 1938- இல் நீதிக்கட்சியின் சார்பாக தந்தை பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்” தலைவராகப் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தர்களாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்.
‘திராவிட இயக்கம்’ தமிழகத்தில் ஆட்சியை அமைக்க விதையாகவும் வேராகவும் இருந்தது இந்தி எதிர்ப்பு போராட்டக் களம் தான். பள்ளியில் கட்டாயப் பாடமாக இந்தியைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பிய இராஜாஜியின் (காங்கிரசின்) எண்ணமே அன்றைய ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
1937, ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று ராஜாஜி அறிவித்தது முதல் தமிழறிஞர்களால் இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் தமிழகமெங்கும் பிரச்சாரமாக முன்னெடுக்கபட்டது. குறிப்பாக, சென்னையை மையமாகக் கொண்டு போராட்டம் போராட்டம் பெரிய அளவில் நடந்தது. மறியல், கைது என்று அடுத்தடுத்து தொடர்ந்ததால் பெரிய மக்கள் திரள் போராட்டமாக மாறியது.
எதிர்ப்பின் வேகத்தை உணராத ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை கட்டாயமாக இந்தியைப் போதிக்கவேண்டும் என்று 21.4.1938 இல் உத்தரவு பிறப்பித்தார். இதன் பின்விளைவுகள் தெரிந்தும் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார் ராஜாஜி. ‘சமஸ்கிருதத்தைப் படிப்படியாக புகுத்தவே முதலில் இந்தியைக் கொண்டு வந்தேன்’ என்று சென்னை லயோலா கல்லூரியில் வெளிப்படையாகவே ராஜாஜி பேசியிருப்பது இதை உறுதிப்படுத்தும். ராஜாஜியின் இந்த கொள்கையால் இன்னும் தீவிரமாகப் போராடுவதென்று தமிழர்கள் முடிவு செய்தனர்.
கட்டாய இந்தி வந்துவிட்டால் தமிழ் சீரழிக்கப்படுவதுடன் (மொழிக்கலப்பு, மொழிச் சிதைவு ஏற்படுவதுடன்) தமிழர்கள் இரண்டாம் நிலைக் குடிமக்களாகத் தள்ளப்படுவார்கள் என்று தமிழறிஞர்களிம் மத்தியில் எழுந்த பயம் தான் போராட்டத்திற்கு தீப்பொறியாக அமைந்தது.

மே மாதம் 28_ந்தேதி, நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் “தமிழ்ப் பாசறைக்” கூட்டம் நடந்தது. இதில், பெரியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், பட்டிவீரன்பட்டி.பி.ஏ.சவுந்தரபாண்டியனார், உமா மகேஸ்வரன், கே.எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல முக்கியத் தமிழார்வலர்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது குறித்து முடிவெடுத்தனர்.
தமிழின் மீதிருந்த பற்றினால் இந்திக்கு எதிரான இந்த போராட்டம் தமிழகம் எங்கும் தீயாகப்பரவியது. 1938_ம் ஆண்டு ஜுன் 3_ந்தேதி சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. ராஜாஜி வீட்டு முன்பாக மறியல் செய்து, பலர் கைதானார்கள். இந்தி எதிர்ப்பின் அவசியத்தை மக்களிடம் பரப்ப “தமிழர் பெரும்படை” என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது.
பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஜ.குமாரசாமிபிள்ளை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், “நகர தூதன்” ஆசிரியர் திருச்சி திருமலைசாமி ஆகியோர் தலைமையில், தமிழர் பெரும்படையினர் திருச்சி உறையூரிலிருந்து நடைபயணமாக சென்னையை நோக்கிப் புறப்பட்டனர். கிட்டதட்ட 234 ஊர்களின் வழியாக, 42 நாட்கள் நடந்து இவர்கள் சென்னை நகரை அடைந்தனர். சென்னையின் எல்லையில் இவர்களை மறைமலை அடிகள் வரவேற்றார். சென்னை நகரத்தின் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் பொறுப்பை மீனாம்மாள் சிவராஜ் ஏற்றிருந்தார். கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர்கள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துப் போராடினர். இப்படி தமிழகம் முழுவதும் பல தமிழறிஞர்கள் தலைமையில் போராட்டங்கள் வெகுவாக வெடித்தன. போராடியவர்களைக் கைதுசெய்து சிறை தண்டனை விதித்தது அரசு.
பெரியார், அண்ணா கைது:
போராட்டக்காரகளுக்குத் தலைமையேற்று இந்திப் பெயர்ப் பலகைகளை தார் பூசி அழிப்பது, மறியல் என கடுமையாக தனது எதிர்ப்பைத் தெரிவித்த பெரியார் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1938, செப்டம்பர் 26 இல், அண்ணா கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஈழத்து சிவானந்த அடிகள், மறைமலையடிகளின் மகன் மறை.திருநாவுக்கரசு, குடந்தை எஸ்.கே.சாமி உள்ளிட்டவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியை எதிர்த்து முதல் பலி:
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் பலர் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி சிறையிலிருந்த தியாகி.நடராசன் ஜனவரி 15 இல் (1939) மரணமடைந்தார். தமிழகத்தில் மொழிப்பற்றை நிரூபிக்க விழுந்த முதல் பலி தியாகி நடராசன் மரணம்தான். அதைத் தொடர்ந்து தியாகி தாளமுத்துவும் மார்ச் – 11 இல் சிறையிலேயே மரணம் அடைந்தார். இந்த இரண்டு உயிர்பலியும் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் போர்க்களமாகிவிட்டதை சட்டசபையில் சர். ஏ.டி.பன்னீர்செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார், திவான் பகதூர் அப்பாத்துரைப்பிள்ளை ஆகியோர் விரிவாக எடுத்துக்கூறி விவாதித்தனர்.
இந்திக்கு இவ்வளவு கடும் எதிர்ப்பு இருக்கும் என்று ஆரம்பத்தில் ராஜாஜி நினைக்கவில்லை. போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து பெரியாரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். 167 நாள் சிறையிலிருந்த பெரியார், 22.4.1939 இல் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான 6 மாதங்களுக்குப்பின், போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். “போராட்ட வீரர்களை விடுதலை செய்ததற்கு நன்றி. ஆனால், கட்டாய இந்தி உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது” என்று பெரியாரும், மற்ற தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.
இந்த சூழலில், “பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதில்லை” என்ற தீர்மானத்தைக் காங்கிரஸ் மேலிடம் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரிசபைகள் பதவியை விட்டு விலகின. தமிழகத்தில் ராஜாஜி மந்திரிசபையும் 28.10.1939 இல் பதவி விலகியது. 21.2.1940 இல் கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றவர்களில் பெண்கள் உட்பட மொத்தம் 1,269 பேர். ஒருவழியாக முதற்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
திராவிடர் கழகம்:
தான் தலைமையேற்று வழிநடத்தி வந்த ‘நீதிக்கட்சி’யின் பெயரை 1944-ல் ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், ‘திராவிடநாடு’ அல்லது ‘தனித் தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் அறிஞர் அண்ணா மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதைக் காரணம்காட்டி, அண்ணா தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

குறிப்பாக நீதிக்கட்சியில் பணியாற்றிய கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் பங்கு அளப்பரியதாகும். ஆனால் அவரின் பங்கு குறித்து இன்றளவும் திராவிட இயக்க வரலாற்றில் முழுமையாக சொல்லப்படாமலே உள்ளது. 26.12.1937 அன்று திருச்சியில் முதன் முதலில் கி.ஆ.பெ.வி. “சென்னை மாநிலத் தமிழர் மாநாடு” பெயரில் இந்தி எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டினார். “தமிழனுடைய நாடு, படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய நூல் கடல் நீரால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது. தமிழனுடைய அறிவு புராணங்களால் மழுக்கப்பட்டது. தமிழனுடைய ஒற்றுமை சாதியால் பிரிக்கப்பட்டது….” என்று அவர் வெளியிட்ட அறிக்கை அனைத்து தமிழர்களையும் போராட்டத்தில் ஈர்க்கும்படி அமைந்தது.
இராஜாஜி இந்தியை ஆதரித்து பேசிய போதெல்லாம் கி.ஆ.பெ. தனது வாதத்திறமையால் வென்று காட்டினார். உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம், இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ள இந்தி என இந்திமொழி ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்புவர். இவரோ, “பெரிய பூனைக்கு என்று ஒரு துளை செய்த பிறகு குட்டிப் பூனைக்காக ஒரு சிறு துளை செய்வது முட்டாள் தனம்” என்று பதில் தருவார். 1938இல் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.வி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின் தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. 95 வயது வரை ஒரு தமிழ்த் தேசியராகவேத் தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்த கி.ஆ.பெ., சாவதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த அறிக்கையில் “தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பாடமொழியாக்கினால் நான் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் சாவேன்” (மாலை முரசு 19.12.1994) என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இருந்தாலும் இந்த அளவுக்கு எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே copy - past பண்ணியிருக்கீங்களே brother...இது நியாயமா?
ReplyDelete