Saturday, 1 February 2014

மயிர்க்கூச்செறிதல்


புளகாங்கிதம் அடைந்தேன். சிலிர்க்க வைக்கிற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். மயிர்க் கூர்ச்சு  அறிதல் என்பதற்கு புளகம் என்று ஓர்  அருமையான தமிழ்ச் சொல் இருக்கிறது, கூர்ச்சு என்றால் கூர்மை. Sharp என்று ஆங்கிலத்தில் சொல்கிறீர்களே அது. நம் தோலில் உள்ள உரோமங்கள் கூர்மையாகக் குத்திட்டு நிற்றல்தான் மயிர்க்கூர்ச்சு அறிதல் அல்லது புளகம்.

நீங்கள் காவிரியில் குளித்துக் கொண்டிருக்கிறீர்கள். மார்கழித் திங்கள் என்ற போதும் பகல் வேளையாதலால், ஆறு வெதவெதவென்று இதமாகத்தான் இருக்கிறது. கரையேறும்போது காற்று உங்களைக் கடந்து போகிறது. ஜில் என்ற குளிர் காற்று. கையைப் பார்க்கிறீர்கள். ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. உடலைத் துடைத்துக்கொண்டு ஆடை மாற்றி விட்டு வந்து ஒரு டிகிரி காபியை இளஞ்சூடாக ரசித்து ரசித்துப் பருகிவிட்டு தலையை ஆற்றப் பிரித்துப் போட்டுக்கொண்டு டி.வி. சுவிட்சைப் போடுகிறீர்கள். அதில்-

உங்களை அப்படியே அள்ளிக்கொண்டு போகிற பாட்டு. உங்கள் சிறுவயதில் உங்களைத் தூங்க வைக்க பாட்டி பாடி நீங்கள் கேட்டுக் கேட்டுக் கிறங்கிப் போன பாட்டு. கையைப் பார்க்கிறீர்கள். ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன.

இதுதான் மயிர்க்கூச்செறிதல். சரி, அது ஏன் ஏற்படுகிறது?

நம் தோலின் மேல் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றும் தோலுக்குக்கீழ் ஒரு மிக மிகச் சிறிய தசையில் (erector pilae) நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த நுண் தசைகள் சுருங்கும்போது தோலின் மேற்புறத்தில் அவை அழுத்தம் ஏற்பட்டு, மயிர்க்கால்கள் புடைத்தெழுகின்றன. ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. கோழியை உரிச்சா... அதன் தோல்ல சின்னச் சின்ன புடைப்பு இருக்கும் பார்த்திருக்கிறீர்களா, அந்த மாதிரி நம் தோலில் புடைப்பு ஏற்படும். அதனால் இதற்கு இங்கிலீஷ்காரன் Goose Pimple  என்று பெயர் வைத்திருக்கிறான் (Goose என்றால் வாத்து).

அந்த நுண் தசைகள் ஏன் சுருங்குகின்றன? அதற்குக் காரணம், அட்ரினலின் என்ற ஹார்மோன்.நம் சிறுநீரகங்களின் மேல், ஆம் ஆத்மி குல்லாய் போல் அமைந்துள்ள தம்மாத்துண்டு சுரப்பிகள். இந்த மூன்றங்குலச் சுரப்பிகள் எண்சாண் உடம்பெங்கும் ஓடக் கூடிய ரத்த ஓட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. நம் உணர்ச்சிகளோடு விளையாடக் கூடியவை.

நாம் குளிராக உணரும்போதோ, உணர்ச்சி வசப்படும்போதோ (பயம் கோபம், நாணம், காதல்) அட்ரினல் சுரப்பிகள் சுரக்கும். அட்ரினல் ரத்தத்தில் பாய ஆரம்பித்துவிடும். அதனால் நம் உடல் கதகதப்பாக இருக்கும். கதகதப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடுதான்  ரோமங்களும் குத்திட்டு நிற்கின்றன.      

இந்தப் புளகம் நம் பூர்வ ஜென்மப் பயன். அதாவது நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் சொத்து. நம் முன்னோர்கள் விலங்குகள் என்பதைப் பெருமையோடு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நிறைய ரோமங்கள் உள்ள விலங்குகளுக்கு குளிர் எடுக்கும்போதோ அல்லது அச்ச உணர்வு ஏற்படும்போதோ அவை குத்திட்டு நிற்கும். அதற்கு இரண்டு அவசியங்கள். ஒன்று, அப்படிக் குத்திட்டு நிற்கும்போது ரோமங்களுக்கிடையே உள்ள காற்று அதிகமாகி, அதன் காரணமாக கதகதப்பு ஏற்படும். இரண்டு, அந்த விலங்கின் உருவம் சடாரெனெப் பெரிதாகத் தெரிவதால் தாக்க வந்த விலங்குகள் அஞ்சும்.

பரிணாம வளர்ச்சியில் மனிதர்களாகிய நாம் இந்த ரோம சாம்ராஜ்யத்தை இழந்து விட்டோம். ஆனால் மரபணுக்களில் பதிந்திருந்த உணர்வுகள் கடத்தப்பட்டு நம்மிடமும் வந்து சேர்ந்துவிட்டன. அதனால் புளகம் நமக்கு உடல்ரீதியாகத் தேவையில்லாததாக ஆகிவிட்டது.

தேவை இல்லாததாக? இல்லை இல்லை. நாம் விலங்கிலிருந்து வந்தவர்கள் என்பதை இந்தச் சிறு ரோமங்கள் அவ்வப்போது நினைவூட்டுகிறதே!

No comments:

Post a Comment