முதல் நாளே அதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கிவிட்டன. திமுக பொதுக்குழு
கூடுவதற்கு முன் தினம், டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடந்த,
‘நெஞ்சுக்கு நீதி’ நூல் வெளியீட்டு விழாவில், ‘யாரோடு சேருவோம் என்பதையும்
யாரோடு சேரமாட்டோம் என்பதையும் எங்களுடைய கடந்தகால வரலாற்றை நியாயமாக,
நேர்மையாக சிந்தித்துப் பார்த்து அந்த முடிவை நீங்களே எடுத்துக்
கொள்ளுங்கள்’ என்று சொன்ன கருணாநிதி, அதற்கு முன், கடந்த காலத்தில் திமுக
ஆட்சி கலைக்கப்பட்ட தருணங்களை நினைவு கூர்ந்து, இந்திரா காந்தியின்
கடற்கரைக் கூட்டப் பேச்சையும் குறிப்பிட்டார். அப்போதே மறுநாள்
எடுக்கப்போகும் முடிவு எத்தகையதாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது.
அடுத்த நாள் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கம், கே.என்.நேரு உள்ளிட்ட அநேகமாக எல்லாப் பேச்சாளர்களும் ‘நமக்கு துரோகம் செய்த காங்கிரசை விட்டு விலக வேண்டும்’ என்றே பேசினார்கள் எனத் தெரிகிறது. முன்னாள் எம்.பி.திருச்சி சிவாவின் விமர்சனம் கடுமையாக இருந்தது. ‘2ஜி அலைக்கற்றைப் புகாரில் ஆ.ராசாவின் வாக்குமூலம் பதிவு செய்வதைக் கூட காங்கிரஸ் அனுமதிக்கவில்லை’ என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய சிவா, ‘காங்கிரசுடன் வைத்துக் கொண்ட கூட்டிற்கு கட்சி கொடுத்த விலை அதிகம்’ எனக் கொந்தளித்தார்.
காங்கிரசை விமர்சித்துப் பேசினாலும் பாஜகவுடன் கூட்டு சேர்வதையும் தவிர்க்க வேண்டும் என்பதே பரவலாக நிலவிய கருத்து. துறைமுகம் காஜா, ‘காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே நச்சுப் பாம்புகள்’ என்று இரண்டையும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் ஸ்டாலின் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன்,‘பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்கலாம்’ என்கிற ரீதியில் பேசினார். ஆனால் கருணாநிதி அதை ரசிக்கவில்லை. கூட்டத்தின் இறுதியில் இதற்கு பதிலளிப்பது போல், ‘சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நரேந்திர மோடி குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால் எனக்கோ, பேராசிரியருக்கோ, ஸ்டாலினுக்கோ அந்தச் சலனம் ஏற்படவில்லை. பாரதிய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்தக் கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதிய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதிய ஜனதா வேறு. கூட்டணி குறித்துப் பேசும்போது அந்தக் கட்சியின் தலைமை யார் என்பதைப் பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும்" என்று கருணாநிதி பேசினார்.
இரண்டு தேசியக் கட்சிகளையும் உதறிவிட்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என திமுக கருதுவதற்குக் காரணம் என்ன?
1. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் காங்கிரஸ் பலவீனமடைந்து வருகிறது என அது கருதுகிறது. அண்மையில் நடந்த நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளை சில தலைவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
2. மீனவர் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை போன்றவற்றால் தமிழ்நாட்டில் காங்கிரசின் செல்வாக்கு சரிந்துள்ளது என்பது அதன் கணிப்பு. காங்கிரசோடு கூட்டணி சேர்ந்தால் கணிசமான இடங்களை அதற்கு ஒதுக்க நேரிடும். ஆனால் காங்கிரசால் அவற்றை வெல்ல முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. 2006 சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூடுதலாக இடம் கேட்டது. திமுக அதற்கு இணங்காததால் இரண்டு கட்சிகளுக்குமிடையே உரசல் ஏற்பட்டது. அதனையடுத்து 2011-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக திமுக அறிவித்தது. பின் இரண்டு தரப்பிற்குமிடையே சமாதானம் ஏற்பட்டு, காங்கிரசிற்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்படி கையை முறுக்கி அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. தன்னுடைய இடங்களை வெல்ல முடியாதவர்களுக்கு விட்டுக் கொடுப்பது தேர்தலுக்கு முன்பே தோற்பதற்கு இணையானது என்ற ஒரு கருத்து நிலவுகிறது
3. காங்கிரசின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற போதிலும் அது தமிழகத்தில் பாஜகவிற்கு சாதகமாக மாறவில்லை. மோடி அலை என்ற ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதால் அதன் பலன் பாஜகவிற்குக் கிடைக்குமேயன்றி திமுக, அதன் சில வாக்கு வங்கிகளைப் பறி கொடுக்க நேரிடலாம்.
4. ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதின. எல்லாக் கட்சிகளின் ஆதரவையும் திமுக கோரியது. ஆனால் காங்கிரஸ் அதற்கு பதிலே சொல்லவில்லை. பாமக, இடதுசாரிகள், பாஜக ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற போதிலும் பதிவான வாக்குகளில் 30 சதவீதம் அளவிற்கு திமுக வாக்கு பெற்றிருக்கிறது. எனவே மற்ற கட்சிகளின் ஆதரவில்லை என்றாலும் திமுக வலுவாகவே இருக்கிறது
5. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்கப் போதிய இடங்கள் கிடைக்காது. அதே நேரம் மாநிலக் கட்சிகளின் கையே ஓங்கி நிற்கும் எனப் பலரும் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அதனால் யாருடன் சேர்ந்து கொள்ளலாம் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வதே புத்திசாலித்தனமானது.
சரி, திமுக போடும் கணக்கு என்ன?
இந்தத் தேர்தலில், ஏன் எந்தத் தேர்தலிலும் உண்மையான போட்டி என்பது திமுக - அதிமுக இடையில்தான். ஏனெனில் மற்ற கட்சிகள் எந்த அணியில் இருந்தாலும் அவற்றின் வாக்கு விகிதங்களில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டு விடுவதில்லை. உதாரணமாக 2006 சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக அணியில் இருந்தது. அப்போது அது பெற்ற வாக்குகள் 1.3%. 2011 சட்டமன்றத் தேர்தலில் அது திமுக அணிக்கு வந்தது. அப்போது அது பெற்ற வாக்குகள் 1.5%.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டபோது பாமக பெற்ற வாக்குகள் 6.4%. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது பாமக பெற்ற வாக்குகள் 5.2%. இடதுசாரிகள் எந்த அணியில் இருந்தாலும் 2 சதவீத அளவிற்கு வாக்கு பெறுகிறார்கள்.
எந்தக்
கூட்டணியிலும் இல்லாமல் பாஜக கடந்த 10 ஆண்டுகளாக 2 சதவீத அளவில் வாக்குகள்
பெற்று வருகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கட்சிகள் இடம்
பெயர்வதால் இந்த இரண்டு பெரிய கட்சிகள் பெரிதாக லாபமோ, நஷ்டமோ அடைவதில்லை.
ஆங்கிலத்தில் சொன்னால், synergy effect என்பது ஏற்படுவது இல்லை.
கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் திமுகவிற்குப் பெரிதாக வாக்கு சதவீதம் கூடுவதில்லை. மாறாக குறைந்து வருகிறது. கடந்த மூன்று தேர்தல்களாக திமுக 22 முதல் 26 சதவீதம் வாக்குகள் பெற்று வருகிறது (2006-இல் 26.5%, 2009-இல் 25.1%, 2011-இல் 22.4%).
திமுக, அதிமுக என்கிற இரண்டு கட்சிகள் பெறும் வாக்கு வித்தியாசங்கள் இடையில் ஏற்படும் 5 முதல் 7 சதவீத மாற்றம் முடிவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளின் சதவீதம் 25.1%, அதிமுக பெற்ற வாக்குகளின் சதவீதம் 22.9%. ஆனால் திமுக பெற்ற இடங்கள் 18, அதிமுக பெற்ற இடங்கள் 9.
இந்த 5 முதல் 7 சதவீத வாக்குகளைக் கைப்பற்றத்தான் திமுக திட்டமிடுகிறது. அது சாத்தியமா?
கடந்த தேர்தல்களில் காங்கிரசிற்கு எதிரான வாக்குகள் அதிமுகவிற்கோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ சென்றன. இந்த முறை காங்கிரசிற்கு எதிரான வாக்குகள் ஒட்டுமொத்தமாக அதிமுகவிற்குச் சென்றுவிடாதிருக்க வேண்டுமானால் காங்கிரசிற்கு எதிராகக் களம் கண்டாக வேண்டும்.
பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பற்றி கவலை இல்லை. ஏனெனில் சிறுபான்மை மக்கள் வாக்குகள், தலித் மக்கள் ஆதரவு இரண்டும் திமுகவிற்கு நெடுங்காலமாய்க் கிடைத்து வந்திருக்கின்றன. மதிமுக பாஜகவோடு சேருமானால், காங்கிரஸ் - பாஜக இரண்டிற்கும் எதிரான தமிழ் தேசியவாதிகளின் வாக்குகளைக் கூடக் கேட்டுப் பெறலாம்.
இவை எல்லாம் சேர்ந்து வாக்கு வீதத்தில் 3 முதல் 5 சதவீத மாற்றங்களை ஏற்படுத்துமானால் கணிசமான இடங்களைப் பெறலாம்.
தடைகள் என்ன?
அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள்- பெரும் வெற்றி கண்டு வருகிறது. இதற்கு மக்கள் ஆதரவு மட்டுமின்றி களப்பணியிலும் அது வலுவாக இருப்பது ஒரு காரணம்.
தமிழகத்தின் உரிமைகளுக்காக அது தொடர்ந்து வாதிட்டு வந்திருக்கிறது. ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 9 ஆண்டு காலம் பங்கு வகித்திருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டி காங்கிரசிற்கு எதிரான வாக்குகளைத் தன் பக்கம் திருப்ப அது முயற்சிக்கும்.
இப்போது அரசியல் வட்டாரங்களில் உலவுகிற தகவல்களின்படி, குறைந்தது நான்குமுனைப் போட்டி நிலவும். அந்த நிலையில் காங்கிரஸ், பாஜகவிற்கு எதிரான ஓட்டுக்கள் பிரியும்.
கணக்குகள் புதிராகின்றன. ஆனால் சுவாரஸ்யமான புதிர்.
No comments:
Post a Comment