Thursday, 2 January 2014

பனியிலோ, மழையிலோ நனைந்தால் ஜலதோஷம் பிடிப்பது ஏன்?



         ச்ச்ச்சூ! தோஷங்களில் எனக்கு ஹச்ச்சூ..! பிடித்த தோஷம் சந்தோஷம். பிடிக்காத தோஷம் ஹச்ச்சூ! ஜலதோஷம், ஆனா அதுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி வந்து பிடிச்சுக்கும். எதுக்கும் இரண்டடி தள்ளி வெச்சே படிங்க. உங்களையும் கபால்னு  பிடிச்சுக்கப் போவுது.

உலகத்தில எத்தனையோ கற்பனை. எத்தனையோ கட்டுக்கதை. எத்தனையோ பீலா. எத்தனையோ கப்சா. அதில இதுவும் ஒன்று. ஆமாம் மழையிலோ, பனியிலோ நனைவதற்கும் சளி பிடிப்பதற்கும் சம்பந்தம் கிடையாது.அப்படியென்றால் ஏன் தமிழில் ஜலதோஷம் என்றும், ஆங்கிலத்தில் கோல்டு (cold), சில் (Chill) என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். என் பெயர் கூடத்தான் எழிலரசன். ஆனால் சின்னப் பிள்ளைங்க பூச்சாண்டின்னு மிரளுதுங்க. சில பேரு பக்கிரின்னு நினைச்சு, யோவ் தள்ளி நில்லுன்னு மிரட்டியிருக்காங்க. ஆட்டோக்காரரிலிருந்து அடுத்த வீட்டுக்காரர் வரை தாடின்னுதான் கூப்பிடறாங்க. பேரில என்னங்க இருக்கு.

அப்படியானா ஏன் மழைக்காலத்தில/ பனிக்காலத்தில அதிகம் பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது என்று கேட்கிறீர்களா? இப்பக் கேட்டீங்களே அது நியாயமான கேள்வி.

நமக்கு ஜலதோஷம் பிடிக்கக் காரணம் ரைனோ வைரஸ் என்ற ஓர் நுண்ணுயிர். வைரஸ், பாக்டீரியா இரண்டும் நுண்ணுயிர்கள்தான். இதில் பாக்டீரியா என்பது செத்தது, உயிருள்ளது இரண்டிலும் வளரும். இறந்த உடல் அழுகுவதற்கும் பாக்டீரியாதான் காரணம். நம் வயிற்றுக்குள் முகாமிட்டு சில வைட்டமின்களைத் தயாரிப்பதும் பாக்டீரியாதான். ஆனால் வைரஸ் உயிருள்ளவற்றின் மீதுதான் வளரும்.செத்ததைச் சீந்தாது.

சளி பிடிக்கக் காரணமான ரைனோ வைரஸ் மழை, பனிக்காலங்களில் காற்றில் அதிகம் இருக்கும். எங்கேயாவது பனிக்கு இதமாக கதகதவென்று வீடு கிடைத்தால் குடியேறி டேரா போடலாம் என்று கூட்டம் கூட்டமாய் அலைந்து கொண்டிருக்கின்றன. நாம்தான் மூக்கைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறோமே.

நம் சுவாசப் பாதையின் மேல் பகுதியின் (அதாங்க மூக்கு, சைனஸ், நுரையீரலுக்குச் செல்லும் குழாயின் மேற்புறம்)  உள்சுவரில் போய் குடியேறும். ஏனெனில் அந்தப் பகுதி மென்மையாகவும் மூச்சுக் காற்றின் போக்குவரத்து காரணமாக இளஞ்சூடாகவும் இருக்கும்.

திடுதிடுனு வந்து திண்ணையில் உட்கார்ந்து விட்ட அழையா விருந்தாளிகள் வீட்டுக்குள் புகுந்து விடாமல் அதாவது நுரையீரலுக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக நம் உடல் எதிர்ப்பு சக்தியை இறக்கி விடுகிறது. ரைனோ வைரஸ் காற்றில் திரியும் சஞ்சாரி. சுவாசத்தைப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிடக் கூடும் என்பதால் அதை நகரவிடாமல் முடக்குவதற்காக கொழகொழவென்று ஒரு திரவத்தை மூக்கு சுரக்கிறது. சேற்றில் மாட்டிக்கொண்ட மனுஷங்க போல வைரஸ் நகர முடியாமல் திணறுகிறது.

அதைத் திணற அடிப்பது மட்டுமா நோக்கம்? வெளியே துரத்துவது அல்லவா நோக்கம்? ஹச்ச்ச்சூ! நீங்கள் தும்மல் போடுகிறீர்கள். விருந்தினர்களில் சிலர் வெளியே துரத்தப்படுகிறார்கள். அப்புறம் பல முயற்சிகள். சிந்திச் சிந்தி உங்கள் கைக்குட்டை ஈரமாகிறது.

மழைக் காலத்தில் அதிகம் பேருக்கு ஜலதோஷம் பிடிப்பதற்குக் காரணம், மற்ற நாள்களைப் போல நாம் திறந்த வெளிகளில் அதிகம் திரியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதுதான். ஏனெனில் அதைப் போன்ற சூழ்நிலையில் நாம் போடும் தும்மலில் வெளியேறும் வைரஸ்கள் அறைக்குள்ளே  சுற்றிவரும்.

ஜலதோஷம் என்பது ஒரு தொற்றுதான். ஆனால் வியாதி அல்ல. அது நம் தற்காப்பிற்காக நமது உடல் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாம் அதை இம்சை என நினைக்கிறோம்!.

இந்த இம்சையை வெல்ல என்னென்னெவோ செய்கிறோம். மாத்திரைகளை அள்ளி விழுங்குகிறோம். அவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் ரைனோவைத் துரத்தாது, கட்டுப்படுத்தாது. ஆன்டிபயாடிக்கள் பயன் தராது. ஆவி பிடிப்பதால் பிரயோஜனம் இல்லை. வெந்நீர் குடிப்பதால் விடுதலை கிடைக்காது. சூப்-அதிலும் சிக்கன் சூப்-கொஞ்சம் கட்டுப்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த இம்சையோடு நாம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்குதான் இயற்கை ஓர் ஆச்சரியம் நிகழ்த்துகிறது. ஆம், நம்மைத் தாக்கும் ரைனோ வைரஸுக்கு ஆயுசு ரொம்பக் கம்மி. இரண்டு நாட்கள் அதிகபட்சம் நாலு நாட்கள். அதனால் மேடி புயல் போல் மிரட்டிக்கொண்டு வந்தாலும் நாலு நாட்களில் அவை வலுவிழந்துவிடும்.

இனி ஜலதோஷம் பிடித்தால், அலட்டிக் கொள்ளாமல், இதுவும் கடந்து போகும் என்று சூப் குடித்துக்கொண்டு சுகமாக தூக்கம் போடுங்கள். உங்களை அறியாமலே சூப்பர் என்று சொல்வீர்கள். ஹச்ச்சூ!

No comments:

Post a Comment