Thursday, 23 January 2014

மண்ணுக்கு மரம் லாபமே!

விவசாயிகளுக்கு மாற்று வருமானம் தரும் மரம் வளர்ப்பு மற்றும் அதற்குரிய காப்பீட்டுக்கான வழிகாட்டல்கள்

பாசனத்திற்குப் போதுமான அளவு நீர் இருப்பதில்லை. தேவையான நேரத்திற்கு வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. பருவநிலை மாற்றத்தால் பார்த்துப் பார்த்து பயிர் செய்த பயிர்களும் சமயத்தில் எதிர்பார்த்த மகசூல் தருவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் இனி வரும் காலங்களில் நிரந்தர வருமானத்திற்கு ஓரளவாவது வழி செய்துகொண்டால்தான் விவசாயிகள் பொருளாதாரச் சிக்கலிலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு இருக்கும் ஒரே வழி மரம் வளர்ப்பது.

மரங்களை எப்படி வளர்ப்பது, அதற்கான தொழில்நுட்பங்கள் என்ன, எப்படி அறுவடை செய்வது, யாரிடம் விற்பனை செய்வது போன்ற விவரங்களை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கிய தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகளுக்கான மதிப்புக் கூட்டு சங்கிலித் திட்டத்தின் மூலமும் பெறலாம். இத்திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ICAR) செயல்படுத்திவரும் தேசிய வேளாண்மை புதுமைத் திட்டத்தின்கீழ் (NAIP) இயங்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் உயர்ரக மரக்கன்றுகளை குளோனல் முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது வனக்கல்லூரி. தமிழ்நாடு காகித ஆலை, சேஷசாயி காகித ஆலை, வாசன் தீக்குச்சித் தொழிற்சாலை, ஆரோமிரா உயிரி எரிசக்தி நிறுவனம் மற்றும் அம்பி பிளைவுட் போன்ற மரம் சார்ந்த தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த முறை சாகுபடித் திட்டத்திலும் விவசாயிகளை இணைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தரமான மர நாற்றுகள், சிறந்த மர வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் சந்தை நிலவரம் போன்றவை சரியான நேரத்தில் கிடைக்கின்றன. மேலும் விவசாயிகள் தங்கள் மரங்களுக்கேற்ற சரியான விலையை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தொழிற்சாலைகளிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர்.

தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றம் அல்லது கடும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மரக்காப்பீடு (Tree Insurance) திட்டத்தையும் இந்தியாவிலேயே முதல் முறையாக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த மரக்காப்பீடானது இயற்கைச் சீற்றங்கள், சமுதாயக் காரணங்கள், வனவிலங்குகள், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் போன்ற இடர்பாடுகளால் (Risk coverage) மரங்கள் பாதிக்கப்படும்போது ஏற்படும் நஷ்டத்திற்கு விவசாயிகள் அதுவரை செலவு செய்த ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது.

இந்த மரக்காப்பீட்டுத் திட்டம் உருவாகக் காரணமாக இருந்த பேராசிரியர் முனைவர் கா.த.பார்த்திபன், வனக்கல்லூரி இழப்பீட்டுத் தொகையை முதல் வருடத்திலிருந்தே கொடுப்பதற்கும், பிரிமியம் தொகையை ஒரே நேரத்தில் செலுத்துவதற்கும், ஒரு விவசாயினுடைய காப்பீடு செய்யப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் உள்ள மரங்கள் பாதிக்கப் பட்டாலும் அதற்கான நஷ்ட ஈட்டை வழங்குவதற்கும், மரத்திற்கு மட்டுமல்லாது அதை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்குவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

இத்திட்டத்தில் இதுவரை காகித ஆலைகள், பிளைவுட் ஆலைகள், தீக்குச்சித் தொழிற்சாலைகள், உயிரி எரிசக்தி நிறுவனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மூலப் பொருட்கள் தரும் மரங்களான சவுக்கு, தைல மரம், மலைவேம்பு, பெரு மரம், குமிழ் மரம், சவுண்டல் மற்றும் சிசு மரம் போன்ற ஏழு வகையான மரங்களை இணைத்துள்ளதாகவும் இன்னும் பல மரங்களையும் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் என்.கே.புத்தன், மேலும் சில கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

பயிர்க் காப்பீட்டுக்கும் மரக்காப்பீட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வங்கிக் கடன் பெற்ற மற்றும் பெறாத விவசாயிகளின் தானியப்பயிர் மற்றும் தென்னை மரங்களுக்கு வழங்கப்படுகிறது. இயற்கை இடர்பாடுகளால் இவற்றின் உற்பத்தி குறையும்போது ஏற்படும் நஷ்டத்தை பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஈடுசெய்கிறது. ஆனால் மரக்காப்பீடானது எதிர்பாராத விபத்துகளினாலும், வனவிலங்குகள் மற்றும் எதிரிகளின் செயல்களாலும் மரங்கள் சேதமடைந்தால், அதுவரை அந்த மரங்களை வளர்ப்பதற்கு ஏற்பட்ட உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு நஷ்ட ஈடாக வழங்குகிறது.

இத்திட்டத்தின் பயன்கள் என்னென்ன?
இத்திட்டம் விவசாயிகளின் முதலீட்டைப் பாதுகாப்பதுடன் வங்கிகளிலிருந்து கடன் பெறவும் உதவுகிறது. வங்கிகள் இன்சூரன்ஸ் பாலிசியை பிணையமாகக் கருதி விவசாயிகளுக்கு கடன் தர முன் வருவதால் பல விவசாயிகள் பயன் பெறுவார்கள். இன்சூரன்ஸ் பாதுகாப்பு உள்ளதால் விவசாயிகள் எந்த அச்சமும் இன்றி மரம் வளர்ப்பில் ஈடுபடலாம்.  

மரக்காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் யார் யார்?
தன் சொந்த நிலத்திலோ அல்லது குத்தகை நிலத்திலோ பயிரிடப்படும் மரங்களுக்கு விவசாயிகள் பாலிசி எடுக்கலாம். இது தவிர ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் மரங்களுக்கு, எந்த மரம் சார்ந்த தொழிற்சாலையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களோ அந்தத் தொழிற்சாலையே மொத்தமாக அனைத்து ஒப்பந்த விவசாயிகளின் மரங்களுக்கும் பாலிசி (group policy) எடுத்துவிடும்.

எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன சான்றிதழ்கள் இணைக்க வேண்டும்?
மரக்காப்பீடு செய்ய அதற்கான கோரிக்கைப் படிவத்தை (proposal form) பூர்த்தி செய்து அருகிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தில் கொடுத்து பிரிமியம் செலுத்தி பாலிசியை பெற்றுக்கொள்ளலாம். வேறு எந்த ஆவணமும் தேவையில்லை. சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்கள் இடர்பாடுகளால் மரங்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வளவு பரப்பளவில் உள்ள மரங்களைக் காப்பீடு செய்யலாம்?
ஒரு விவசாயி குறைந்தபட்சமாக ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள மரங்களை காப்பீடு செய்யலாம். அதிகபட்ச நில வரம்பு கிடையாது.

எந்தெந்த இடர்பாடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது?
எதிர்பாராத தீ, காட்டுத் தீ, புதர்த் தீ, இடி, மின்னல், எதிரிகளின் தாக்குதல், கலவரம், புயல், சூறைக்காற்று, அதிக வெள்ளம், தண்ணீரில் மூழ்குதல், வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் சேதம் மற்றும் வனவிலங்குகளினால் ஏற்படும் சேதம் ஆகியவற்றிற்கு நஷ்டஈடு வழங்கப்படுகிறது. இது தவிர குறிப்பிட்ட நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதலால் மரங்கள் சேதமடையும் என்று கருதினால் கூடுதால் பிரிமியம் செலுத்தி பாதுகாப்பு பெறலாம்.

ஒரு ஏக்கர் மரத்திற்கு, காப்பீடு செய்யப்படும் தொகை (sum insured) எப்படி கணக்கிடப்படுகிறது?
ஒரு குறிப்பிட்ட மரப்பயிரை ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட ஆகும் முக்கிய செலவுகளான நிலம் உழுதல், நாற்றுக்களின் மொத்த மதிப்பு, நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், உரம் மற்றும் மருந்துச் செலவுகள், மற்ற பிற அத்தியாவசிய செலவுகள் போன்றவற்றின் கூட்டுத்தொகையே ஒரு ஏக்கர் மரத்திற்கு காப்பீடு செய்யப்படும் தொகையாகும். உதாரணமாக ஒரு ஏக்கர் சவுக்கு பயிரிட முதல் வருடம் 20,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தால் அந்தத் தொகையே காப்பீடு செய்யப்படும் தொகையாகும். இரண்டாம் ஆண்டு கூடுதலாக  10,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தால் இரண்டாம் ஆண்டிற்கான காப்பீடு செய்யப்படும் தொகை 30,000 ரூபாய் ஆகும்.

எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும்?
ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் மரங்களுக்கு அதற்கு ஆகும் மொத்தச் செலவுகளைக் கணக்கிட்டு அந்தச் செலவுத் தொகைக்கு 1.25 சதவிகிதம் பிரிமியமாக செலுத்த வேண்டும். நோய் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டுமானால் மொத்தமாக 1.60 சதவிகிதம் பிரிமியம் செலுத்த வேண்டும்.

மரக்காப்பீட்டிற்கு செலுத்தும் பிரிமியத்திற்கு மானியம் ஏதாவது உள்ளதா?
தற்போது மானியம் எதுவும் இல்லை.

மரத்திற்கு இழப்பீடு நடந்ததை காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிப்பதற்கு கால வரம்பு உள்ளதா?
விபத்து நடந்து மரங்கள் பாதிக்கப்பட்டால் அருகிலுள்ள எங்கள் அலுவலகத்திற்கு 24 மணி நேரத்திற்குள் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். உடனடியாக மதிப்பீட்டாளரை அனுப்பி நஷ்டஈடு கணக்கிடப்படும்.  

எப்படி நஷ்டஈடு கணக்கிடப்படுகிறது? எப்போது நஷ்டஈடு கிடைக்கும்?
விபத்து பற்றி தகவல் பெற்றவுடன் மதிப்பீட்டாளரை அனுப்பி, கள ஆய்வு (survey) செய்யப்படும். அன்றைய தேதி வரை பாதிக்கப்பட்ட மரங்களை வளர்க்க, விவசாயி செய்த மொத்தச் செலவே அதிகபட்ச நஷ்டமாகக் கருதப்படும், அதிலிருந்து பாதிக்கப்பட்ட மரங்களை உடனடியாக விற்றால் கிடைக்கக்கூடிய தொகையைக் கழித்து வரும் மீதித் தொகையில் 80 சதவிகிதம் நஷ்ட ஈடாக வழங்கப்படும். நஷ்டஈடு கணக்கிட்டு ஒரு வாரத்திற்குள்  விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

விவசாயிகள் நஷ்டஈட்டை எப்படி பெறுவர்? பணமாகவா? வங்கிக் கணக்கிலா?
நஷ்டஈட்டுத் தொகையானது நேரடியாகவும் உடனடியாகவும் விவசயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நஷ்டஈட்டு கோரிக்கைப் படிவத்துடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இக்காப்பீட்டுத் திட்டத்தை மற்ற வகை மரங்களுக்கும் கொண்டுவரும் எண்ணம் உள்ளதா?
ஆம். பலவகை தோட்டப்பயிர்கள், தோப்புப் பயிர்கள் மற்றும் மூலிகைப் பயிர்களுக்கு தேவையான இன்சூரன்ஸ் திட்டங்களை வடிவமைத்து வருகிறோம். விவசாயிகள் நிறைந்த நம் நாட்டில் எதிர்காலத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மரக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என நம்புகிறோம்.

மழையில்லாமல் கடும் வறட்சியால் மரங்கள் பாதிக்கப்படுவதையும் இடர்பாடுகளில் சேர்க்க வேண்டும் என்பது பெரும்பான்மையான விவசாயிகளின் கோரிக்கையாகும்.

மேலும் விவரங்களுக்கு
1. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன மண்டல அலுவலகங்கள்:
1) சென்னை  044 - 28293933
2) கோவை  042 22239710
3) மதுரை  045 22342152
2. கா.த.பார்த்திபன், பேராசிரியர் – 9443505844
 

கன்னு...பார்த்து நடுங்க கண்ணு!

மரக்கன்றுகளை நடும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஒன்றரை அடி நீள அகலமும் ஒன்றரை அடி ஆழமும் கொண்ட குழி தோண்டிக் கொள்ள வேண்டும்.

குழியைத் தோண்டி ஒரு மாதம் காயப்போட வேண்டும். அப்போதுதான் மண்ணின் சூடு அடங்கி, கன்று வளரும் சூழல் ஏற்படும்.

குழியில் 2 கிலோ இயற்கைச் சாண எருவைக் கொட்டி அதையும் காயவிட வேண்டும்.

ஒரு மாதம் கழித்து கன்றுகளை நட வேண்டும். அப்போது வேர் மற்றும் தண்டின் இணைப்புப் பகுதி மண்ணுக்குள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

கன்று நடவு செய்து ஆறு மாதங்கள் வரை கண்டிப்பாக தண்ணீர் விட வேண்டும்

ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் மரம் நடும்போது அவை வடகிழக்குப் பருவமழையில் நன்கு வளரும்.

மண்ணை தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் பல்வேறு வகையான மண் வகைகள் காணப்படுகின்றன. காவிரி டெல்டா பகுதிகளைப் பொருத்தவரை தேக்கு மற்றும் குமிழ்தேக்கு மரங்கள் நல்ல திரட்சியாக வளருகின்றன. மணல்சாரியான பகுதிகளில் சவுக்கு, தைல மரம் போன்றவை வளரும்.அதுபோல அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அணுகும்போது அவர்கள் எந்த மரத்தை நடலாம் என ஆலோசனை வழங்குகின்றனர்.

மரம் வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகள்
மரம் என்பது பொதுவாக இருபது,முப்பது ஆண்டுகள் கழித்து பலன் தருவது. அதனால் விவசாயிகளின் தொடர் வருமானத்திற்காக மரங்களுக்கு இடையே ஊடுபயிராக என்ன பயிர் செய்யலாம் என்பது குறித்த தகவல்கள் மற்றும் பயிற்சிகளை வனத்துறை அலுவலகங்கள் அளிக்கின்றன. அதுபோல மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற பயிற்சிகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

சு.வீரமணி



வீட்டுத் தோட்டம் அமைக்க அரசு மானியம்
காய்கறிகளை கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை. உங்கள் வீட்டிலேயே சிறுதோட்டம் அமைக்க அரசே மானியம் தந்து, வழிகாட்டுகிறது. தமிழக அரசின் வேளாண்துறை  5 கோடி ரூபாய் செலவில்,  ‘நீங்களே செய்து பாருங்கள்’ (Do it Yourself)  என்கிற திட்டத்தை முதல் கட்டமாக சென்னை மற்றும் கோயமுத்தூரில் அறிமுகப்படுத்தியிருக்கிறது .

அதென்ன, நீங்களே செய்து பாருங்கள்?
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளை நீங்களே  உங்கள் வீட்டில் விளைவித்துக் கொள்ளலாம். நகரத்தின் வீடுகளில் விளைவிக்க ஏது இடம் என்று கேட்கிறீர்களா? உங்கள் வீட்டு மொட்டை மாடியே போதும். 160 சதுர அடி இருந்தால் போதும். கத்தரி, தக்காளி, வெண்டைக்காய், வெங்காயம், கீரை வகைகள் என்று  வேண்டிய காய்களை விளைவிக்கலாம். தோட்டம் அமைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் 50% மானிய விலையில் அரசு வழங்குகிறது. இதில் விதைகள், இயற்கை உரங்கள், பாலித்தீன் பைகள், வாளிகள் என அனைத்தும் அடங்கும். இதில் 2,414 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 1,207 ரூபாய்க்கு அரசு வழங்குகிறது. தோட்டத்தை எப்படி பராமரிப்பது என்கிற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

எங்கு அணுகுவது?
சென்னையில் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம்,
மாதவரம், சென்னை-51. தொலைபேசி: 044-25554443
கோவையில் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம்,
8 தடாகம் சாலை, கோவை - 641013
தொலைபேசி 0422-2453578

இணையத்தில்http://tnhorticulture.tn.gov.in/application-do-yourself-kit  இந்தச் சுட்டியில் சென்றும் பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment